கொரோனா தொற்றுநோயால் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வருட இறுதியில் போனஸ் வழங்குமாறு கோரிக்கை விடுக்கும் தொழிலாளர்களை, சர்வதேச ஆடை உற்பத்தி நிறுவனமொன்று   குண்டர்களை பயன்படுத்தி அடக்க முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை தடுக்க குண்டர்களைப் பயன்படுத்துவதாக ஆடை உற்பத்தி நிறுவனம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தமக்கு நியாயம் கிடைக்க வேண்டுமெனக் கோரி போராட்டத்தைத் தொடரும் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய ஊழியர்களுக்கு எதிராக பொலிஸார் பயன்படுத்தப்பட்டுள்ளதோடு, குண்டர்கள் வரவழைக்கப்பட்டதாக ஊழியர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

நிறுவன  முகாமைத்துவம் பிரதான நுழைவாயில் வழியாக ஊழியர்கள் நுழைவதைத் தடுக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

"சுமார் 150 பொலிஸ் அதிகாரிகள் அழைத்து வரப்பட்டனர். இந்த ஊழியர்கள் பாதாள உலக தரப்பினரால் அச்சுறுத்தப்பட்டனர்" என ஒரு பெண் ஊழியர் கூறியுள்ளார்.

டிசம்பர் மாதத்தில் கிறிஸ்மஸ் விடுமுறைக்கு முன்னதாக போனஸ் செலுத்துவதாக நிர்வாகம் அளித்த வாக்குறுதிகளை நம்பி, ஊழியர்கள் நோய்வாய்ப்பட்ட நிலைமையிலும் விடுமுறையின்றி  கடமைக்கு சமூகமளித்ததாகவும், விடுமுறை  நெருங்கும் நிலைமையில் போனஸை செலுத்த முடியாது என நிர்வாகம் தங்களுக்கு அறிவித்ததாகவும் அவர்  குறிப்பிட்டுள்ளார்.

"இது நிர்வாகத்தின் தீர்மானம். அவர்கள் திடீர் முடிவை எடுத்தார்கள். அது அவர்களின் தீர்மானம் மாத்திரமே. அவர்கள் யாரிடமும் பேசவில்லை, இந்த போனஸை வழங்க முடியாது என அவர்கள் ஆரம்பத்திலேயே அறிவிக்கவில்லை.”  என நெக்ஸ்ட் நிறுவனத்தின் பெண் ஊழியர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

நிறுவனம் நட்டத்தில் இயங்குவதால் போனஸ் வழங்க முடியாது எனத் தெரிவித்த முகாமையாளர், பொறுப்பானவர்களுடன் கலந்தாலோசித்து போனஸை பெற்றுத்தருவதாக உறுதியளித்ததாகவும், ஆனால் அவர்கள் ஒரு தொலைபேசி அழைப்பிற்குக்கூட பதிலளிப்பதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுமார் 2,000 பேர் பணியாற்றும் நெக்ஸ்டில் சுமார் 600 ஊழியர்கள் இரண்டாவது கொரோனா தொற்று அலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக, பெரும்பாண்மையான பெண்கள் பணிபுரியும் முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தின் தொழிலாளர் பிரச்சினைகளை கையாளும் தாபிந்து அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சமிலா துஷாரி தெரிவித்துள்ளார்.

இதன் விளைவாக, சில தொழிலாளர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டதோடு,  ஏனையவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டதாக, தெரிவித்துள்ள சமிலா துஷாரி அந்த காலகட்டத்தில் ஊழியர்களின் கொடுப்பனவுகள் மற்றும் சம்பளங்களில் குறைப்புகள் மேற்கொள்ளப்பட்டதாக  வலியுறுத்தியுள்ளார்.

இத்தகைய சூழ்நிலையை எதிர்கொண்டுள்ள நிலையில், கடுமையான பொருளாதார நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள் நிர்வாகம் உறுதியளித்த போனஸை செலுத்தாததால் அவர்களை நிர்க்கதிக்குள்ளாக்கியுள்ளதாக  தெரிவித்துள்ள சமிலா துஷாரி, போதிய பணம் இல்லாததால் விடுமுறை நாட்களில் ஊழியர்கள் தமது ஊர்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

பிசிஆர் பரிசோதனைகள் முடிந்த பின்னரே கிறிஸ்மஸ் விடுமுறைக்கு வீடு திரும்புமாறு ஊழியர்களின் கிராமங்களுக்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்திருக்கின்ற நிலையில், சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள தொழிலாளர்களுக்கு பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள பணவசதி இல்லையெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி