ஒட்டுச்சுட்டான் - முத்துஐயன்கட்டு இளம் குடும்பஸ்தர் உயிரிழந்தமை தொடர்பில் இரு விசேட பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்து
வருகின்றன என பொலிஸ் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் எப்.யூ.வூட்லர் தெரிவித்தார்.
நேற்று கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
சம்பவம் தொடர்பில் இதுவரையில் 3 இராணுவ சிப்பாய்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் இருவர் கொள்ளையிடுவதற்கு ஒத்துழைப்புக்களை வழங்கிய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். தாக்குதலை மேற்கொண்டு காயப்படுத்திய குற்றச்சாட்டில் மற்றைய சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளார்.
முகாமுக்குள் உட்பிரவேசிக்க முயன்ற சிவில் பிரஜைகளிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே குறித்த இராணுவ சிப்பாய்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எவ்வாறிருப்பினும் இதனை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக, கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துவதற்கு நீதிமன்றத்திடம் அனுமதி கோரப்பட்டுள்ளது என்றார்.
இதேவேளை, “ஒட்டுச்சுட்டான் - முத்துஐயன்கட்டு இளம் குடும்பஸ்தர் உயிரிழந்த விவகாரத்தில் ஒரு தலைப்பட்சமாக செயற்படுவதற்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாம் முயற்சிக்கவில்லை” என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் வருண கமகே தெரிவித்தார்.
“இராணுவ முகாமிற்குள் சில தரப்பினர் அனுமதியின்றி பிரவேசிக்க முற்பட்டமையே இந்த சம்பவத்துக்கான அடிப்படை காரணியாகும். இவ்வாறு உட்பிரவேசித்தவர்களில் ஒருவர் பிடிபட்ட நிலையில் அவர் அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
“குறித்த நபர் தொடர்பில் இதற்கு முன்னரும் அதாவது ஜனவரி 18ஆம் திகதி இதே முகாமிற்குள் நுழைந்து பொருட்களை திருடியமை தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் இந்த தகவல் கிடைத்த பின்னர் முன்னெடுக்கப்பட்ட விசாரணைக்கமைய இந்த மரணத்துக்கும் இராணுவத்தினருக்கும் தொடர்பில்லை எனத் தெரியவந்துள்ளது.
“இந்த விவகாரத்தில் ஒரு தலைப்பட்சமாக செயற்படுவதற்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாம் முயற்சிக்கவில்லை. பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவோம்” என்றார்.