நாட்டில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடுகள், கொலைகள் மற்றும் போதைப்பொருள் வலைப்பின்னலுடன் நேரடியாக தொடர்புடைய பல பாதுகாப்புப்
பிரிவினரின் பெயர்கள் பொலிஸாருக்குத் தெரியவந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இவர்கள் தொடர்பாக பொலிஸார், புலனாய்வுப் பிரிவுகள், முப்படையினர் ஆகியோர் தனித்தனியாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும், இச்சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை காவல்துறை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
துப்பாக்கிச் சூட்டை நடத்தியமை, கடமைக்குரிய துப்பாக்கிகளை பாதாள உலகக் கோஷ்டிகளுக்கு வழங்கியமை, துப்பாக்கிகள் மற்றும் போதைப்பொருட்களை கொண்டுசென்றமை போன்ற குற்றச்சாட்டுகள் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளதாகவும், விசாரணைகள் நிறைவடைந்தவுடன் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
குறிப்பாக பொலிஸ் மற்றும் இராணுவத்திலிருந்து ஆயுதங்களை களவாடிய மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்ட துப்பாக்கிகளை முகாம்களிலிருந்து களவாடிய மேலும் சிலரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் இடம்பெற்ற பல குற்றச் சம்பவங்களுக்கு தகவல்களை வழங்கியமை தொடர்பாகவும் பல பாதுகாப்புப் பிரிவினர் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அந்த பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.