எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மற்றும் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்காத சிரேஷ்ட அரசியல்வாதிகள் குழுவொன்று,
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சித் தலைவர்களை எதிர்வரும் சில நாட்களில் சந்திக்கத் தீர்மானித்துள்ளது.
எதிர்க்கட்சியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் பொதுவான விடயங்களில் இணைந்து செயற்படுவதற்குப் பின்பற்ற வேண்டிய வேலைத்திட்டம் மற்றும் உபாயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதே இதன் நோக்கமாகும் என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமை பிற்பகல் முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸின் இல்லத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர்கள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர்.
இந்த சந்திப்பு எந்தவொரு அரசியல் கட்சியையோ அல்லது அமைப்பையோ கட்டியெழுப்பும் நோக்கில் அல்லாது, நாட்டைப் பாதிக்கும் சமூக, பொருளாதாரப் பிரச்சினைகள் தொடர்பில் இணக்கப்பாட்டை ஏற்படுத்தி, ஒரு பரந்த தளத்தை உருவாக்குவதற்காகவே இடம்பெற்றதாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குறிப்பிடுகின்றார்.
இந்த எதிர்கால வேலைத்திட்டம் தொடர்பான ஒரு கருத்தாக்கப் பத்திரத்தை தயாரிப்பது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் நீடித்த இந்தக் கலந்துரையாடலில், ஜி.எல். பீரிஸ், மிலிந்த மொரகொட, அநுர பிரியதர்ஷன யாப்பா, சுசில் பிரேமஜயந்த, பாட்டலி சம்பிக ரணவக்க, மஹிந்த அமரவீர, மனோ கணேசன், நிஷான் காரியப்பர், ரிஷாட் பதியுதீன், தயாசிறி ஜயசேகர, ரமேஷ் பத்திரண, லசந்த அழகியவன்ன, மயந்த திஸாநாயக்க, பிரேம்நாத் சி. தொலவத்த ஆகிய முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று கலந்துகொண்டது.
ஜி.எல். பீரிஸின் இல்லத்தில் இந்த முன்னாள் அமைச்சர்கள் குழு இதற்கு முன்னரும் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளது.
எதிர்க்கட்சிகளின் பொதுவான மேடை ஒரு தலைமைத்துவ சபையின் கீழ் இயங்கவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.