கொழும்பு, பேராதனை மற்றும் திறந்த பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 250 கல்வி இளமானி பட்டதாரிகளுக்கு கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக நியமனம்
வழங்கப்படாமலுள்ளது. இவ்வாறு 3 குழுக்களுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்படாமல் காணப்படுகின்றனர்.
உயர்தரத்தில் அமைந்த பட்டங்கள் மற்றும் ஆசிரியர் பயிற்சி பெற்ற அரச பல்கலைக்கழக பட்டதாரிகளுக்கான ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவும் சூழலில், அமைச்சரவை முடிவுகள் காரணமாக நியமனங்கள் தாமதமாகியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (24) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
"கல்வி இளமானி பட்டதாரிகள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு தீர்வொன்றைப் பெற்றுக் கொடுங்கள். இவர்களின் நலன் கருதி சரியான நடவடிக்கை எடுக்கப்படாததற்கான காரணத்தை அறிய விரும்புகிறோம். நியமனங்களை வழங்கும் விடயத்தில் சட்டப் பிரச்சினை தடையாக இருந்தால், அந்த சட்டப் பிரச்சினை தீர்க்கப்பட்டவுடன் நியமனங்களை பெற்றுக் கொடுங்கள் என எதிர்க்கட்சித் தலைவர் வேண்டுகோள்" விடுத்தார்.
கல்வி குறித்த விவாதத்தை உயர் மட்டத்திலான தரத்தில் முன்னெடுத்துச் செல்வதற்கு வெள்ளை அறிக்கை அவசியமாக காணப்படுகிறது. என்றாலும், அத்தகைய வெள்ளை அறிக்கையை இதுவரை முன்வைக்கவில்லை. பிரித்தானிய பாராளுமன்ற முறைமையின் பிரகாரம், ஆரம்பத்தில் பச்சை அறிக்கை முன்வைக்கப்படும். பின்னர் ஒரு வெள்ளை அறிக்கை தயாரிக்கப்படும். கல்விச் சீர்திருத்தங்களை வலுவாகவும் வினைதிறனாகவும் முன்னெடுத்துச் செல்ல இதுபோன்ற ஒரு வெள்ளை அறிக்கை மிகவும் அவசியம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி இது தொடர்பாக ஒரு வெள்ளை அறிக்கையைத் தயாரித்து, ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களின் போதும், பின்னர் வந்த தேர்தலிலும் முன்வைத்தது, சமூக இணக்கப்பாட்டை எட்டிக்கொண்டது. அரசாங்கம் Power Point முன்வைப்பைத் தாண்டி ஒரு வெள்ளை அறிக்கையை முன்வைக்கும் பட்சத்தில், அதன் ஊடாக சிறந்த கருத்துப் பரிமாற்றத்தின் மூலம் முற்போக்கான கல்விச் சீர்திருத்தத்தை நோக்கிச் செல்ல முடியுமாக இருக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
கல்விச் சீர்திருத்தம் என்பது காலத்தின் அவசியமாகும். அது நிகழும்போது, குறித்த இலக்குகளையும் எதிர்பார்ப்புகளையும் எவ்வாறு அடைவது என்பது குறித்த தெளிவான புரிதல் காணப்பட வேண்டும். இந்த சீர்திருத்தங்கள் ஒரு குறிப்பிட்ட கால அட்டவணையுடன் செயல்படுத்தப்பட வேண்டும். எந்தவொரு செயல்முறையும் ஒழுங்கற்ற முறையில் தொடங்கினால், அதன் முடிவு வெற்றிகரமான ஒன்றாக அமையாது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இன்று நாட்டில் காலாவதியான, பழைய முறைகளைப் பின்பற்றும், பாரம்பரிய கட்டமைப்பிற்குள் மட்டுண்ட கல்வி முறையே காணப்படுகிறது. இது நம் நாட்டு மாணவர்களுக்கு செய்யும் மிகப்பெரிய அநீதியாகும். கல்வி என்பது மனித உரிமையும் அடிப்படை உரிமையும் ஆகும். தற்போதைய அரசாங்கம் வாக்குறுதியளித்தபடி அரசியலமைப்புச் சீர்திருத்தங்களை முன்னெடுத்தால், நலன்புரி பொருளாதாரத்தின் முக்கிய அம்சங்களான கல்வி, சுகாதாரம், வாழ்வாதாரம், வாழும் உரிமை, பொருளாதாரம், சமூகம், கலாச்சாரம், மதம் மற்றும் அரசியல் போன்ற உரிமைகள் மனித மற்றும் அடிப்படை உரிமைகளாக அமையும் விதமாக இருக்க வேண்டும். தற்போதைய கல்வி முறைமை புதுப்பிக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பாக இன்று (24) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தின் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
கல்வியை ஸ்மார்ட்டான ஒன்றாக மாற்றும் போது ஸ்மார்ட் மாணவர், ஸ்மார்ட் இளைஞன், ஸ்மார்ட் குடிமகன், ஸ்மார்ட் நாடு உருவாகும். கல்வியில் வழக்கமான மனப்பாடம் செய்யும் கற்றல் முறையை இல்லாதொழித்து, நாடும் உலகமும் எதிர்கொண்டு பன்முக பிரச்சினைகள் மற்றும் சவால்களுக்குத் தீர்வுகளை வழங்கக்கூடிய குடிமக்களை உருவாக்க வேண்டும். நமது நாட்டின் கல்வித்துறையில் தகவல் தொழில்நுட்பம் கட்டாயமாக்கப்பட வேண்டும். விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல், ஆங்கிலம், கலை மற்றும் கணிதம் ஆகிய துறைகளை நோக்கிச் செல்ல வேண்டும். ஆங்கில மொழியை மையமாகக் கொண்ட கல்வி சகல பாடசாலை கட்டமைப்பிலும் முன்னெடுக்க வேண்டும்.
பிள்ளைகளின் கல்வி உரிமை, மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்
செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல், STEAM துறை மற்றும் இயந்திரவியல் கற்றல் போன்ற புதிய தொழில்நுட்பக் கல்வியை நாட்டுப் பிள்ளைகளுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும். கல்விக்கான மனித உரிமையை நாம் உண்மையிலேயே பாதுகாக்க வேண்டும்.
பிரதமர் முன்வைத்த விடயங்களில் பல பிரச்சினைகள் காணப்படுகின்றன
பிரதமர் முன்வைத்த விடயங்களில மூலோபாய ரீதியான விடங்களோ செயல்பாட்டு ரீதியான நடவடிக்கைகளில் போதிய விவரங்களோ அடங்கியிருக்கவில்லை. இதை நடைமுறையில் எவ்வாறு செயல்படுத்துவது மற்றும் செயல்படுத்துவதற்கான காலக்கெடு என்பன தெளிவாகத் தெரியவில்லை. 2029 ஆம் ஆண்டில் உறுதியான அடைவுகள் இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றன.
உரிய செயல் வரைவு காணப்படாத விடத்து, பாடசாலை கல்வியில் பாதிக்கும் மேற்பட்ட மாணவர்களால் இதன் பலன்களைப் பெற முடியாமல் போகும். பாலர் கல்வியில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்களையும் பிரதமர் தெளிவாக குறிப்பிடவில்லை. இந்த சீர்திருத்த திட்டத்தில் கிராமப்புற பாடசாலைகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்படவில்லை.
ஆல்பா மற்றும் பீட்டா தலைமுறைகளின் எண்ணங்களையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்
உயர்தரக் கல்வியை வழங்கும் 3,000 பாடசாலைகளில் 1,000 பாடசாலைகள் மாத்திரமே விஞ்ஞானம் மற்றும் கணிதக் கல்வியை போதிக்கின்றன. ஆசிரியர் பயிற்சி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து தெளிவான திட்டம் எதுவும் இந்த புதிய சீர்திருத்தத்தில் குறிப்பிடபடவில்லை. ஆசிரியர்களின் நலன் கூட புறக்கணிக்கப்பட்டுள்ளன.
இந்த மாற்றத்தை ஏற்படுத்தும் பயணத்தை ஆரம்பிக்க, பாடசாலைத் துறையில் ஈடுபட்டுள்ள சகலரையும் மையமாகக் கொண்டதொரு திட்டத்தை நோக்கிச் செல்ல வேண்டும். பாட வேளையின் கால அளவைக் கருத்தில் கொள்ளும்போது, ஆல்பா மற்றும் பீட்டா தலைமுறைகளின் எண்ணங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
பட்டபின் கற்கைகள், பிரயோக ஆங்கிலத் திறன்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு என்பன புறக்கணிக்கப்பட்டுள்ளதோடு, அவற்றில் கவனம் செலுத்தப்படவுமில்லை. பாதிக்கப்படக்கூடிய பிரதேசங்களை இலக்காக் கொண்ட திட்டம் பற்றியோ, ஊட்டச்சத்து திட்டம் பற்றியோ எதுவும் குறிப்பிடப்படவில்லை. 240,000 க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கான பயிற்சித் திட்டம் குறித்தும் தெளிவான தகவல் எதுவும் இல்லை. கல்விக்காக ஒதுக்கப்படும் நிதி குறைந்த மட்டத்திலயே செலவிடப்படுவதால், குறித்த ஒதுக்கீடு இங்கு முழுமையாக பயன்படுத்த வேண்டும்.
வரலாறு கட்டாயப் பாடமாக வேண்டும்
கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பம் கட்டாயமாக்கப்பட்டது போல, வரலாற்றுப் பாடத்தையும் முக்கிய ஒரு பாடமாக ஆக்க வேண்டும். கல்வி முறைமையின் தரத்திற்கு இது முக்கியமானது. வரலாறு என்பது விடயங்களை மனப்பாடம் செய்யும் நடவடிக்கையல்ல. மாறாக ஒரு நாட்டினது குடிமக்களின் அடித்தளத்தை கட்டமைக்கும் மானிடவியலாகும். பொதுவான பாரம்பரியம், கலாச்சார விழுமியங்களைப் புரிந்துகொள்ள இப்பாடப்பரப்பு உதவுகிறது. கடந்த கால வரலாற்று நிகழ்வுகளிலிருந்து காரண-காரிய விளைவுகளின் தொடர்பு குறித்து புரிந்துகொள்வது விமர்சன சிந்தனை, பிரச்சினைகளைத் தீர்க்கும் திறன் போன்றவற்றை விருத்தி செய்யும். எனவே, வரலாறு கட்டாயப் பாடமாக ஆக்கப்பட வேண்டும்.
கல்வியில் காணப்படும் பேதம் முடிவுக்கு வர வேண்டும்,
ஸ்மார்ட் கல்வி மூலம் நமது நாட்டின் வளர்ச்சி, முன்னேற்றம், மனித மூலதன மேம்பாடு என்பன நோக்கி இந்த சீர்திருத்தம் செல்ல வேண்டும். கல்வி முறைமையின் மூலம் வெளிவரும் இளைஞர்கள், யுவதிகள், குடிமக்கள் சர்வதேச தொழிலாளர் சந்தையில் வேலைவாய்ப்புகளை அணுகுவதற்கும், சர்வதேச தொழிலாளர் சந்தையில் தொழிலை பெறுவதற்கும் முடியுமாக இருக்க வேண்டும். இதன் மூலம், கல்வித் துறையில் காணப்படும் உள்ளோர் இல்லாதோர் இடையேயான பேதங்களை நீக்க முடியும். இலவச கல்விக்குள் காணப்பட்டு வரும் இந்தப் பேதத்தை நீக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் சுட்டிக்காட்டினார்.