முதல் ஒருங்கிணைந்த சுற்றுலா ஹோட்டல் வளாகமான சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்கா திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளவிருந்த
பொலிவூட் நடிகர் ஷாருக்கான், அமெரிக்காவின் நியூயோர்க்கிற்கு திடீரென புறப்பட்டதால் இலங்கைக்கான விஜயத்தை இரத்து செய்தார்.
இருப்பினும், அவர் திடீரென நியூயோர்க்கிற்கு புறப்பட்டது குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை. அவரது நாட்குறிப்பில் இல்லாத இந்த திடீர் விஜயம் தொடர்பில், இந்திய ஊடகங்களும் அதிக ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நுவா ஹோட்டல் மற்றும் மெல்கோ ரிசார்ட்ஸ் & என்டர்டெயின்மென்ட் இணைந்து நிர்மாணித்த பிரமாண்டமான கேசினோ வளாகம் ஆகஸ்ட் 2ஆம் திகதி சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவாக திறக்கப்பட உள்ளது.
எனினும், இதன் முதற்கட்டமாக கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 687 அறைகளுடன் சினமன் லைஃப் ஹோட்டல் திறந்து வைக்கப்பட்டது.
நுவா ஹோட்டல், 113 அறைகளைக் கொண்ட ஒரு ஹோட்டல். மெல்கோ, மக்காவ், பிலிப்பைன்ஸ் மற்றும் சைப்ரஸில் ஒருங்கிணைந்த ரிசார்ட்டுகளையும் (IR) இயக்குகிறது. இவை அனைத்தும் கனவுகளின் நகரம் City of Dreams என்ற பிராண்டின் கீழ் உள்ளன.
இதேவேளை, கடந்த ஏப்ரலில், இலங்கை அரசாங்கத்திடமிருந்து 20 வருட கசினோ உரிமத்தை வென்றுள்ளதாக மெல்கோ அறிவித்தது.
இதன்படி, ஜோன் கீள்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இங்குள்ள கேமிங் ஏரியாவின் அபிவிருத்திக்காக 125 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்யவுள்ளதாகவும் நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
கேசினோ ஆண்டுக்கு 250 மில்லியன் டொலர் மொத்த கேமிங் வருவாயை (GGR) உருவாக்கும் என்று ஹாங்காங்கில் பிறந்த கனேடிய தொழிலதிபரும் மெல்கோவின் தலைவருமான லாரன்ஸ் ஹோ கூறினார்.