பஸ் கட்டணத்தை எதிர்வரும் 04ஆம் திகதி நள்ளிரவு முதல் 0.55 சதவீதத்தால் குறைக்க நேற்றைய (01) அமைச்சரவையில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
2025ஆம் ஆண்டுக்கான வருடாந்த பஸ் கட்டணத் திருத்தம் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவால் தயாரிக்கப்பட்டிருந்ததுடன், அதற்கமைய 2.5 சதவீதத்தால் பஸ் கட்டணத்தைக் குறைக்க ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது.
ஆயினும், எரிபொருள் விலைச் சூத்திரத்துக்கமைய மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்தின்படி நேற்று முன்தினம் (30) மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலைத் திருத்தத்துக்கமைய ஒரு லீற்றர் டீசலின் விலை 274 ரூபாவிலிருந்து 289 ரூபா வரை அதிகரித்துள்ளது.
இந்த விலைத் திருத்தத்துக்கிணங்க 0.55 சதவீதத்தால் பஸ் கட்டணத்தைக் குறைக்க முடியும். அதற்கமைய, பஸ் கட்டணத்தை எதிர்வரும் 04ஆம் திகதி முதல் 0.55 சதவீதத்தால் குறைப்பதற்குப் போக்குவரத்து அமைச்சால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்துக்கு அனுமதி வழங்கப்பட் டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பொதுப் போக்குவரத்தில ஈடுபடும் இலங்கை போக்குவரத்துச் சபையின் கீழ் இயங்கும் பஸ்கள், தேசிய போக்குவரத்துச் சபை அல்லது மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் அனுமதியுடன் இயங்கும் தனியார் பஸ்கள் தற்போது நடைமுறையிலுள்ள கட்டணத்தை 0.55 சதவீதத்தால் குறைக்க வேண்டுமென்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
-தமிழன்