ஆஸ்கார் விருதுகளுக்கான படைப்புகளில் சிறந்தவற்றை தேர்ந்தெடுக்கும் குழுவில் இணைய உலக நாயகன் கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
இந்திய அளவில் இதற்கு முன்னர் யாருக்கு எல்லாம் இந்த கௌரவம் கிடைத்திருக்கிறது; புதிதாக சேர்க்கப்பட்டுள்ள விதியில் இருக்கும் சிக்கல் என்ன? இவை குறித்தெல்லாம் விரிவாகப் பார்க்கலாம்..
இன்று ஆஸ்கார் விருது குழு, அகாடமியில் இணைந்துகொள்ள 534 படைப்பாளிகளுக்கு இன்வைட் ஒன்றை அனுப்பியிருக்கிறது. இந்திய அளவில் கமல் ஹாசன், பாலிவுட் நடிகர் ஆயுஷ்மன் குர்ரானா, ஒளிப்பதிவாளர் ரனபீர் தாஸ், ஒப்பனைக் கலைஞர் மேக்ஸிமா பாஸு, இயக்குநர் பாயல் கபாடியா என எட்டு படைப்பாளிகளுக்கு ஆஸ்கார் தேர்வுக்குழுவில் இணைய டிக்கெட் அனுப்பியிருக்கிறது. இந்த ஆண்டு மட்டும் புதிதாக 534 நபர்களுக்கு ஆஸ்கார் குழுவில் இடம்பெறுவதற்கான உறுப்பினர் படிவம் அனுப்பப்பட்டிருக்கிறது.
அகாடாமியின் ஜூரி குழுவில் இணைய ஏற்கெனவே ஆஸ்கார் அகாமியில் மெம்பராக இருக்கும் இருவர் முன்மொழிய வேண்டும். இந்திய அளவில் ஐஸ்வர்யா ராய், அமிதாப் பச்சன், பிரியங்கா சோப்ரா, அமிர் கான், சல்மான் கான், தீபிகா படுகோனே, அனுபம் கேர், மணி ரத்னம், சூர்யா உள்ளிட்ட பலருக்கு இதற்கு முன்னர் ஆஸ்கார் அகாடாமியின் தேர்வுக்குழுவில் இணைய அழைப்பு விடப்பட்டிருக்கிறது. RRR படம் வெளியான போது ராம் சரண், ஜூனியர் NTR, ராஜமௌலி, இசையமைப்பாளர் கீரவாணி, நாட்டு நாட்டு பாடலின் பாடலாசிரியர் சந்திரபோஸ், ஒளிப்பதிவாளர் செந்தில் குமார் உள்ளிட்ட பலருக்கு அழைப்பு விடப்பட்டது. 2017ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 500 பேரை புதிதாக ஆஸ்கார் குழு இணைத்துக்கொண்டிருக்கிறது.
2025ம் ஆண்டு முதல் புதிதாக ஆஸ்கார் தேர்வுக்குழுவில் ஒரு விதியைச் சேர்த்திருக்கிறார்கள். அதன்படி இனி ஒரு பிரிவில் இருக்கும் எல்லா படைப்புகளையும் பார்த்தவர்கள் மட்டுமே, அந்த பிரிவில் தேர்வாகும் படத்துக்கு வாக்களிக்க முடியும். இதற்கு முன்னர் அனைத்துப் படங்களையும் பார்த்திருக்க வேண்டும் என்கிற கட்டாயம் எதுவும் இல்லை.
கமல்ஹாசன் இந்த அழைப்பை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் அடுத்த ஆண்டு விருதுக்கு சமர்ப்பிக்கப்படும் படங்களை கமல் பார்ப்பதற்கான வாய்ப்பு வழங்கப்படும். அந்தப் படைப்புகளில் பிடித்தவற்றை கமல் தேர்வு செய்யலாம்.