மேலதிக நேரப் பிரச்சினையை முன்வைத்து, ரயில்வே தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் ரயில்வே தொழில்நுட்ப உதவியாளர்கள்
இன்று (26) காலை முதல் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர்.
அதன்படி, இன்று காலை 7 மணி முதல் 24 மணிநேர அடையாள வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை பொதுஜன ரயில்வே ஊழியர் சங்கத்தின் செயலாளர் நதீர மனோஜ் தெரிவித்தார்.
தங்கள் பிரச்சினை குறித்து அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்ட போதிலும், இதுவரை எந்த தீர்வும் கிடைக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, தேசிய கல்வியியல் கல்லூரிகள், ஆசிரியர் கல்லூரிகள் மற்றும் ஆசிரியர் அபிவிருத்தி நிலையங்களின் விரிவுரையாளர்கள் இன்று (26) மற்றும் நாளைய (27) தினங்களில், சுகயீன விடுமுறையை அறிவித்து, பணிக்கு சமூகமளிக்காது தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
பத்தொன்பது கல்விக் கல்லூரிகள், எட்டு ஆசிரியர் கல்லூரிகள் மற்றும் நூற்றுப் பன்னிரண்டு ஆசிரியர் அபிவிருத்தி நிலையங்களின் விரிவுரையாளர்கள் இந்தத் தொழிற்சங்க நடவடிக்கையில் இணையவுள்ளதாக, இலங்கை கல்வியாளர் சேவைகள் விரிவுரையாளர்கள் நிபுணத்துவ சங்கத்தின் செயலாளர் எஸ்.எம். பி. பண்டார தெரிவித்தார்.
தமது கோரிக்கைகள் தொடர்பில் கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க களுவெவவுடன் கலந்துரையாடிய போதும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு கிடைக்கவில்லை எனவும் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
இதன்காரணமாக, தொழிற்சங்கம் முன்னரே தீர்மானித்தவாறு தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாகவும் கோரிக்கைகளை வென்றெடுக்கும் நோக்கில் எதிர்வரும் காலங்களில் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு தொழிற்சங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.