இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள மோதல் சூழ்நிலையை கருத்திற்கொண்டு இரு நாடுகளிலும் வாழும்
இலங்கையர்களின் பாதுகாப்பை தொடர்ந்து கண்காணித்து வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையர் எவருக்கும் பாதுகாப்பில் பிரச்சினை இருந்தால், தூதரக அதிகாரிகளை தொடர்புகொள்ள முடியும் என வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா கூறுகிறார்.
இஸ்ரேலில் தங்கியுள்ள இலங்கையர்கள் தொடர்பான தகவல்களைப் பெறுவதில் சிரமம் உள்ள உறவினர்கள், அது குறித்து வெளியுறவு அமைச்சிடம் விசாரிக்கலாம் என்றும் பிரதியமைச்சர் கூறினார்.
இதேவேளை, இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தொடர் ஏவுகணைத் தாக்குதலில் இலங்கைப் பெண்கள் இருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
இன்று (15) காலை இஸ்ரேலின் Batyam மற்றும் Ramat Gan பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஏவுகணைத் தாக்குதல்களினால் கட்டிடங்கள் சேதமடைந்ததன் காரணமாக இவ்விருவருக்கும் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தூதுவர் கூறுகிறார்.
அதன்படி, அவர்கள் தங்கியுள்ள இடங்களுக்கு தூதுதர் நேரில் சென்று நலம் விசாரித்துள்ளார்.
இதேவேளை, ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களில், சிறுவர்கள் உட்பட 128 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் தாக்குதலில் சுமார் 900 பேர் காயமடைந்ததாக ஈரானிய சுகாதார அமைச்சகத்தை மேற்கோள் காட்டி ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உயிரிழந்தவர்களில் இரண்டு மாத குழந்தை ஒன்றும் அடங்குவதாக கூறப்படுகிறது.
இதனிடையே, இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. தாக்குதல்களில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 380 பேர் என இஸ்ரேல் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மத்திய இஸ்ரேலின் பேட் என்ற பகுதியின் மீது நேற்று ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலால், குடியிருப்பு வளாக கட்டிடம் ஒன்று கடுமையாக சேதமடைந்தது. இந்நிலையில், ஈரானின் ஆயுத உற்பத்தி நிலையங்களை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை அந்த இடங்களை விட்டு வெளியேறுமாறு இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரானியர்கள் தங்கள் உயிரைப் பாதுகாக்க இதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்திய இஸ்ரேலிய பாதுகாப்புப் படை, மறு அறிவிப்பு வரும் வரை அந்த இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு எச்சரித்துள்ளது.
இஸ்ரேலின் இந்த எச்சரிக்கை, ஈரான் மீது மேலும் தாக்குதல் நடத்துவதற்கான அறிகுறி என்று வெளிநாட்டு விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஈரானிய அயதுல்லா அல் கமேனியின் ஆட்சிக்கு சொந்தமான ஒவ்வொரு இடங்களையும் ஒவ்வொரு இலக்குகளையும் தாக்கப்போவதாக நேற்று அறிவித்தார்.
எவ்வாறாயினும், இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்ந்தால் தாக்குதலை தீவிரப்படுத்துவோம் என ஈரான் எச்சரித்துள்ளது.