கொழும்பு மாநகர சபையின் அங்குரார்ப்பண கூட்டம் நாளை (16) நடைபெறவுள்ளதுடன், இந்த ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சிமன்றத்
தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கொழும்பு மாநகர சபையின் ஆரம்பக் கூட்டம் நாளை (16) நடைபெறவுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை உள்ளூராட்சி ஆணையாளர் அண்மையில் வெளியிட்டதுடன், அதன் பிரகாரம் கொழும்பு மாநகர மண்டபத்தில் நடைபெறவுள்ள கூட்டத்தில் புதிய மேயர் மற்றும் பிரதி மேயரை தெரிவு செய்வதே முதல் பணியாகும்.
இந்த ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சிமன்றத் தேர்தல் முடிவுகளின்படி கொழும்பு மாநகர சபையின் மொத்த உறுப்பினர்களான 117 பேரில், தேசிய மக்கள் சக்தி 48 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சக்தி 29 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளது.
அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சி 13 ஆசனங்களையும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 5 ஆசனங்களையும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 4 ஆசனங்களையும், சர்வஜன சக்தஜ 2 ஆசனங்களையும் பெற்றதோடு, எஞ்சிய ஆசனங்கள் ஏனைய அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கிடையில் பகிர்ந்தளிக்கப்பட்டன.
வாக்கெடுப்பு முடிவுகளின்படி எந்தக் கட்சியும் 50 சதவீதத்துக்கும் அதிகமான உறுப்பினர்களைப் பெறவில்லை என்பதுடன், கொழும்பு மாநகர சபையின் தலைவர்களைத் தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நாளை ஆரம்பமாகும் கூட்டத்தில் நடத்தப்பட உள்ளது.
கொழும்பு மாநகர சபையில் தேசிய மக்கள் சக்தியைப் போன்றே பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து ஆட்சியமைக்கப் போவதாக அறிவித்துள்ளமையால், நாளை நடைபெறும் வாக்கெடுப்பு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கொழும்பு மாநகர சபைக்கு தெரிவு செய்யப்பட்ட தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் அண்மையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டதுடன் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் இன்று (15) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.