முன்னாள் அமைச்சர்கள் மற்றும் உயர் அரசு அதிகாரிகள் உட்பட ஐம்பதுக்கும் மேற்பட்ட அரசியல்வாதிகள்
சமீபத்திய நாட்களில் ஏராளமான கோயில்கள், விகாரைகள் மற்றும் தேவாலயங்களுக்குச் சென்று பூஜைகள் செய்து ஆசிர்வாதம் பெற்றதாகத் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தச் சடங்குகளைச் செய்தவர்களில் பெரும்பாலோர், பல்வேறு ஊழல் மற்றும் சட்டவிரோத சொத்து சேர்த்தல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்களாவர் என்றும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கதிர்காமத்துக்கு மட்டும், கடந்த சில நாட்களில் இருபதுக்கும் மேற்பட்ட முன்னாள் அரசியல்வாதிகள் வருகை தந்து பூஜைகள் செய்துள்ளதாக கதிர்காம தேவாலாயத் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள உயர் அரசு அதிகாரி ஒருவர் சமீபத்தில் சிறப்பு பாதுகாப்புடன் அநுராதபுரத்துக்குச் சென்று ஜய ஸ்ரீ மஹா போதி விகாரையை வழிபட்டதாகவும், அப்பகுதியின் முன்னணி துறவிகளையும் சந்தித்து ஆசி பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேபோல், இந்தியாவுக்குச் சென்றுள்ள முன்னாள் அரசியல்வாதி ஒருவர் அங்குள்ள ஒரு கோவிலில் பெரிய அளவிலான பூஜையை நடத்தி ஆசிர்வாதம் பெற்றுள்ளார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் மீது எதிர்காலத்தில் இலஞ்சம் மற்றும் ஊழல் வழக்குகள் தொடரப்படும்.
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவும் சட்டமா அதிபரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் மற்றும் அரச நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் தாக்கல் செய்த பல வழக்குகள் உயர் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.
முன்னாள் அமைச்சர்கள், பிரதியமைச்சர்களான ரவி கருணாநாயக்க, மேர்வின் சில்வா, பிரசன்ன ரணவீர, சரண குணவர்தன, விமல் வீரவன்ச, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சந்திராணி பண்டார, ராஜித சேனாரத்ன, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலக்க, முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது மகன் ரமித் ரம்புக்வெல்ல, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராகவே இவ்வாறான வழக்குகள் விசாரணைக்கு வருகின்றன.
இதற்கிடையில், பல்வேறு ஊழல்கள் மற்றும் பிற முறைகேடுகள் தொடர்பாக அரசியல்வாதிகள் உட்பட கிட்டத்தட்ட இருபது அரச அதிகாரிகள், அண்மைய நாட்களில் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.