4 மில்லியன் ரூபாவை மோசடி செய்த குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்ட முன்னாள் நிதி நிறுவன முகாமையாளர்
டபிள்யூ.எம்.அதுல திலகரத்னவின் விடுதலையை நியாயம் தெரிவித்து, சிறைச்சாலைகள் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த விடுதலை, வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாட்டின் ஜனாதிபதியினால் கைதிகளுக்கு வழங்கப்படும் பொது மன்னிப்பின் அடிப்படையில், தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் வழங்கப்பட்ட பொது மன்னிப்பே தவிர, அவரது தனிப்பட்ட நோக்கத்துக்கான விடுவிப்பு அல்ல என்று, திணைக்களத்தின் அறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
வருடாந்த வெசாக் மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்ட கைதிகள் குழுவில் திலகரத்னவும் ஒருவர் என்று தெரிவித்த சிறைச்சாலை ஊடகப் பேச்சாளரும் ஆணையாளருமான காமினி பி. திசாநாயக்க, இது சில நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் கைதிகளுக்கு வழங்கப்படும் பொது மன்னிப்பாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஷ
அந்த நபரை விடுவிப்பது தொடர்பில், தனிப்பட்ட ரீதியில் கவனத்திற்கொள்ளப்படவில்லை. ஆனால் அவரது தண்டனை மற்றும் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட அபராதத்தை குறைத்தல் காரணமாக பொதுவான அளவுகோல்களின் கீழ் அவரும் விடுதலைக்குத் தகுதியுடையவராக அறியப்பட்டார்.
அந்த அறிக்கையின்படி, திலகரத்ன என்பவர், தண்டனைச் சட்டத்தின் பிரிவு 386இன் கீழ் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, இழப்பீடாக ரூ. 20 இலட்சம் அபராதத்துடன் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவராவார்.
அபராதத்தை செலுத்தத் தவறினால் ஆறு மாத கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. வெசாக் மன்னிப்பு விதிகளின் கீழ் அபராதம் தள்ளுபடி செய்யப்பட்டதால் அவருக்கு விடுதலை வழங்கப்பட்டது.
திலகரத்ன, ஏற்கனவே உள்ள நடைமுறைகளின்படி விடுவிக்கப்பட்டதாகவும், அவருக்கு வழங்கப்பட்ட மன்னிப்பு, இலக்கு வைக்கப்பட்டதோ அல்லது விதிவிலக்கானதோ அல்ல என்றும் திணைக்களம் வலியுறுத்தியது.
நேற்று (06) பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா, மன்னிப்பு தொடர்பாக பாராளுமன்றத்தில் கேள்விகளை எழுப்பினார். திலகரத்னவுக்கு தண்டனை விதிக்கப்பட்ட சில வாரங்களுக்குப் பிறகு இந்த விடுதலை நிகழ்ந்ததை எடுத்துக்காட்டினார்.
குறிப்பாக அந்த நபர் மற்ற வழக்குகளையும் எதிர்கொள்வதாகக் கூறப்படுவதால், அத்தகைய மன்னிப்புகளை வழங்குவதன் பின்னணியில் உள்ள செயல்முறை மற்றும் வெளிப்படைத்தன்மையை விளக்குமாறு அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார். எவ்வாறாயினும், அமர்வின் போது எம்.பியின் கேள்விக்கு அரசாங்கம் பதிலளிக்கவில்லை. மாறாக, சிறைச்சாலைகள் திணைக்களம் இன்று பதிலளித்துள்ளது.