அரசின் தேங்காய் ஏலத்தின் போது இடைத்தரகர்கள் விலையை நிர்ணயம் செய்வதே, உள்ளூர் சந்தையில்
தேங்காய் விலை தொடர்ந்து அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் என்று தெங்கு அபிவிருத்திச் சபை கூறுகிறது.
இந்தப் பிரச்சினை தொடர்பில், தெங்கு அபிவிருத்திச் சபையின் தலைவர் சுனிமல் ஜயக்கொடி, அரசு அதிகாரிகளுடன் சமீபத்தில் நடத்திய கலந்துரையாடலின் போது வெளிப்படுத்தினார்.
அரசாங்கத்திற்குச் சொந்தமான தோட்டங்களில் இருந்து தேங்காய்கள் மிகக் குறைந்த விலைக்கு ஏலம் விடப்பட்டாலும், இடைத்தரகர்கள் அந்தப் பங்குகளை வாங்கி சந்தையில் மிக அதிக விலைக்கு விற்று, பெரும் இலாபம் ஈட்டுகிறார்கள் என்றும், இது தேங்காய் விவசாயிகள் மற்றும் நுகர்வோருக்கு நியாயமற்றது மற்றும் பாதகமானது என்றும் ஜயக்கொடி சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து தேங்காய் அறுவடை குறைந்திருந்தா நெருக்கடியான சூழ்நிலையில், தேங்காய் விலை ரூ. 200 ஐ விட அதிகரித்துள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
மே மற்றும் ஜூன் மாதங்களில் 555 மில்லியன் தேங்காய் அறுவடை மதிப்பிடப்பட்டு, உற்பத்தியில் எதிர்பார்க்கப்படும் அதிகரிப்பு இருந்தபோதிலும், விலைகள் தொடர்ந்து அதிகரிப்பது கவலையளிப்பதாக, அவர் சுட்டிக்காட்டினார்.
அதற்கு ஒரு தீர்வாக, தேங்காய் இருப்பில் ஒரு பகுதியை மட்டுமே ஏலம் மூலம் விற்க வேண்டும் என்றும், மீதமுள்ளவை சதொச விற்பனை நிலையங்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் பொதுமக்களுக்கு மானிய விலையில் விநியோகிக்கப்பட வேண்டும் என்றும் முன்மொழியப்பட்டுள்ளது.
அதிகரித்து வரும் தேங்காய் விலை பிரச்சினை தொடர்பில் நீண்ட நேரம் செவிமடுத்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, தேங்காய் விலைகளை நிலைப்படுத்துவதற்கான திட்டத்தை தயாரிக்குமாறு விவசாயத் துறையின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், தேங்காய் உற்பத்தியை அதிகரிக்க, அடுத்த மாதம் முதல் பல திட்டங்களை செயல்படுத்த தெங்கு அபிவிருத்திச் சபை தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அரசாங்கத்திடம் தற்போது கிட்டத்தட்ட 100,000 ஏக்கர் தென்னை நிலங்கள் இருந்தாலும், இந்த நிலத்தின் பெரும்பகுதி பயன்படுத்தப்படாதது குறித்து, இக்கலந்துரையாடலின் போது தெரியவந்தது. மேலும், அந்த நிலங்களை மேம்படுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக சபையின் தலைவர் தெரிவித்தார்.
எதிர்வரும் மாதங்களில், தேங்காய் அறுவடை மீண்டும் குறையக்கூடும் என்றும் இது மேலும் விலை உயர்வுக்கு வழிவகுக்கும் என்றும் தலைவர் எச்சரித்துள்ளார்.