'காணி அபகரிப்பு வர்த்தமானிக்கு எதிராகக் காலக்கெடு விதித்து நாம் வெகுஜனப் போராட்டங்கள்,
சட்ட மறுப்பு போராட்டங்களில் எங்களது மக்களை வழி நடத்த முயன்றபோது, அந்தக் காலக்கெடு முடியும் சமயத்தில் காணி அபகரிப்பு வர்த்தமானியை கைவாங்கும் தீர்மானத்தை அரசு எடுத்திருக்கின்றமையை வரவேற்கின்றோம்' இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
வடக்கில் அரசு கபளீகரம் செய்ய முற்பட்ட 5,960 ஏக்கர் நிலத்திற்கான வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்வதாக அமைச்சரவையில் தீர்மானம் மேற்கொண்டமை தொடர்பில் இன்று தாம் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் சுமந்திரன் மேலும் கூறியவை வருமாறு:-
“காணி நிர்ணயச் சட்டத்தின் கீழ் 2025 மார்ச் 28 அன்று செய்யப்பட்ட வர்த்தமானிப் பிரசுரத்தை மீளக் கைவாங்குவதாக அரசு தீர்மானித்திருப்பதாக அமைச்சரவைத் தீர்மானமாக ஓர் அறிவிப்பு வெளிவந்துள்ளது. இந்த வர்த்தமானிப் பிரசுரம் மார்ச் மாதம் இறுதியிலே செய்யப்பட்டாலும் பல நாள்களுக்குப் பின்புதான் அரச பிரசுரிப்பு மூலமாக தெரியவந்தது.
அதிலும் விசேடமாக ஊடக நண்பன் லோகதயாளன் இந்த வர்த்தமானியைக் கண்டெடுத்தமையினால்தான் இது வெளிவந்தது. அப்போது ஆங்கிலத்திலும் சிங்களத்திலுமே இது இணையத்தில் காணப்பட்டது. மே மாதம் முதலாம் திகதி ஊடகவியராளர் 'முரசு' பத்திரிகை ஊடாக வெளியிடப்பட்டதன் பின்பே தமிழ் மொழிமூலமான வர்த்தமானியும் இணையத்தில் சேர்க்கப்பட்டது.
“இந்தச் செய்தி கிடைத்த உடனேயே ஜனாதிபதிக்கு மே மாதம் 3ஆம் திகதி நான் ஒரு கடிதத்தை எழுதினேன். அதிலே இப்படியான வர்த்தமானிப் பத்திரம் வெளியிடப்பட்டுள்ளது, இது உடனடியாக மீள் கை வாங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினோம். அதற்கு முன்னதாக பல கூட்டங்களிலே பகிரங்கமாக மே மாதம் 28 ஆம் திகதி வரையில் நாம் காலக்கெடு கொடுக்கின்றோம், அதற்கு முன்பாக இந்த வர்த்தமானி மீளக் கை வாங்கப்பட வேண்டும், இல்லையேல் மாபெரும் மக்கள் போராட்டம் ஒன்று நடத்தப்படும் என்றும் நான் எச்சரிக்கை செய்திருந்தேன்.
இது சம்பந்தமாக பலவிதமான செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. 'நிலம் அழிந்தால் இனம் அழிந்து போகும்' என்ற அடிப்படையிலே மிக வன்மையாக நாங்கள் போராடுவதற்குத் தயாராக இருந்தோம். அதேவேளை பல மக்கள் சந்திப்புக்களையும் நடத்தி அந்தப் பிரதேசத்தில் வாழ்பவர்களைச் சட்டத்தரணிகளாக 'மக்களுக்கான நீதி' அமைப்பின் சட்டத்தரணிகளாக - சந்தித்து உண்மையான நிலையையும் நாங்கள் கண்டறிந்திருக்கின்றோம்.
அதற்குப் பிறகு இன்று காலை ஜனாதிபதிக்கு நானும் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானமும் ஒப்பமிட்டு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்தோம். நான் முதலிலே அனுப்பிய கடிதத்தில் இல்லாத விடயங்களையும் சுட்டிக்காட்டி, உடனடியாக இந்த வர்த்தமானி மீளக் கை வாங்கப்பட வேண்டும், இல்லை என்றால் வெகுஜனப் போராட்டங்களிலும், சட்ட மறுப்புப் போராட்டங்களிலும் எங்களது மக்களை வழி நடத்த வேண்டியதாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கின்றோம்.
அப்படியான சட்ட மறுப்பு போராட்டங்களுக்கான ஆயத்தங்கள் ஏற்கனவே செய்யப்பட்டுக்கொண்டு இருக்கின்றன. மே 28ஆம் திகதி கடந்தவுடன் 29ஆம் திகதி அளவிலே பாரிய அளவிலான சட்டப் போராட்டங்கள், பகிஷ்கரிப்புக்கள், மக்களின் எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தத் தயார் படுத்திக்கொண்டிருந்த வேளையிலேதான் அரசு இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.
இதிலே ந.லோகதயாளன், 'முரசு' பத்திரிகையின் பங்களிப்போடு விடயத்தை வெளியிட்ட பிறகு நாடாளுமன்றத்திலே அது குறித்து கேள்வி எழுப்பிய அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எமது நன்றிகளைத் தெரிவிக்க விரும்புகின்றோம். இதிலே ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் நாடாளுமன்றத்திலே உரையாற்றும் போது இந்தச் சட்டத்தின் தேவையையும் இந்தச் சட்டத்தைப் பிரயோகிக்கின்றபோது ஏற்படப் போகும் விளைவுகளையும் மிக நுணுக்கமாகச் சட்ட விளக்கங்களோடு தெளிவுபடுத்தினார்.
அரசு இதனைத் தொடர்ந்து 'தினக்குரல்' பத்திரிகைக்கும் சகல ஊடகங்களுக்கும் ஓர் அறிவிப்பை விடுத்தது. அதிலே இது தொடர்பான நடவடிக்கைகளை இடைநிறுத்துகின்றோம் எனச் சொல்லியிருந்தார்கள். அப்போதே நான் கூறினேன், இது சட்டப்படியாக 3 மாத கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது, அதனை வேறு எந்த வழியிலும் இந்த நடவடிக்கை இடைநிறுத்த முடியாது, ஆகையினாலே வர்த்தமானியை மீளக் கை வாங்க வேண்டும் எனக் கூறினேன்.
இந்த விடயத்தில் சட்டத்தரணிகள் குழாமுக்கும் எனது நன்றிகள். நாம் போராட்டங்களை முன்னெடுக்கலாம். அதேநேரம் சமாந்தரமாக சட்ட நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும். அதை நாங்கள் தொடர்ந்து செய்வோம். வர்த்தமானி அறிவித்தல் கை வாங்கலை விசேடமாக வரவேற்கின்றோம். இதற்காக ஜனாதிபதிக்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்' என்றார்.
-மாலை முரசு