வடக்கு மக்களின் சொந்த காணிகளை அவர்களுக்கு உரித்துடன் வழங்கவே அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
ஆனால், வர்த்தமானி அறிவித்தலைத் தவறாக புரிந்து கொண்டுள்ள தமிழ் அரசியல்வாதிகள் சிலர், மக்களையும் தவறாக வழிநடத்தும் முயற்சியில் ஈடுபடுகின்றனர் என காணி அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.
ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், வடக்கில் மக்களின் காணிகளை அபகரிக்கும் நோக்கம் அரசுக்குக் கிடையாது. கைவிடப்பட்டிருக்கும் அவர்களின் சொந்தக் காணிகளை அவர்களுக்கு உரித்துடன் வழங்கவே அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமையவே வர்த்தமானியை அரசு வெளியிட்டுள்ளது.
இந்த வர்த்தமானி அறிவித்தலைத் தவறாகப் புரிந்துகொண்டுள்ள தமிழ் அரசியல்வாதிகள் சிலர், மக்களையும் தவறாக வழிநடத்தும் முயற்சியில் ஈடுபடுகின்றனர்.
தமிழ் மக்களின் சொந்தக் காணிகளை ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான அரசு சுவீகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது என்று பொய்யான கோஷத்தை முன்வைத்து வடக்கு மக்களை வீதியில் களமிறக்கி அரசுக்கு எதிராகப் போராட வைக்கத் தமிழ் அரசியல்வாதிகள் சிலர் எத்தனிக்கின்றனர்.
எனவே, வடக்கு மக்கள் உண்மையை நிலைமையைப் புரிந்துகொள்ள வேண்டும். போலி வேடம் போட்டு உங்களைத் தவறாக வழிநடத்தும் தமிழ் அரசியல்வாதிகளை நம்ப வேண்டாம் என்று வடக்கு மக்களிடம் கேட்டுக்கொள்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.