இந்த நாட்டில் அழிந்துவிட்டதாகக் கருதப்பட்ட சின்கோனா இனத்தைச் சேர்ந்த பல நன்கு வளர்ந்த
மூலிகைத் தாவரங்கள், 150 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டறியப்பட்டுள்ளன. அம்பகமுவவில் உள்ள அலியாகல மலைத்தொடரின் மேற்குச் சரிவுகளில் இருந்தே இந்த மூலிகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அலியாகல மலைத்தொடரில் இருந்து, இந்த சின்கோனா மூலிகைத் தாவரங்களை கண்டறிந்ததாக, சுற்றுச்சூழல் ஆர்வலர் லக்ஷ்மன் குமார தெரிவித்தார்.
1861ஆம் ஆண்டு ஹக்கல தாவரவியல் பூங்கா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆங்கிலேயர்கள் இந்தச் சின்கோனாவை பயிரிட்டதாகவும், குறுகிய காலத்திற்குள் அதை கைவிட்டதாகவும் அவர் கூறினார்.
இது இலங்கையில் அழிந்துபோன தாவர இனத்தைச் சேர்ந்தது. மேலும், ஹக்கல தாவரவியல் பூங்காவில் ஒரே ஒரு தாவரம் மட்டுமே பாதுகாக்கப்பட்டது. இருப்பினும், மத்திய மலைகளில் இந்த இனத்தைச் சேர்ந்த சில தாவரங்கள் இருக்கலாம் என்று சூழலியலாளர் நம்புகிறார்.
கடல் மட்டத்திலிருந்து சுமார் 742 மீற்றர் உயரத்தில் அமைந்துள்ள உனனகல மலைகளில், நன்கு வளர்ந்த ஆறு தாவரங்களை ஆராய்ச்சி குழு கண்டுபிடித்துள்ளதாக அவர் கூறினார்.
மலேரியாவுக்கு மிகவும் பயனுள்ள மருந்தான க்வினீன் மருந்தைத் தயாரிக்க, சின்கோனா என்ற இந்த மருத்துவத் தாவரம் பயனப்டுத்தப்படுவதாகவும் சுற்றுச்சூழல் ஆர்வலர் கூறினார்.
மலேரியாவிற்கான முதல் பயனுள்ள சிகிச்சைகளில் க்வினீன் ஒன்றாகும். மனிதர்கள் முதன்மைக் காடுகளை அழித்த பிறகு உருவாகும் இரண்டாம் நிலை காடுகளின் படையெடுப்பால் அழிந்துபோகும் அபாயத்தில் உள்ள ஒரு தாவர இனமான சின்கோனா போன்ற நன்கு வளர்ந்த பல தாவரங்களைக் கண்டுபிடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் அவர் கூறினார்.
சின்கோனா என்பது தென் அமெரிக்காவின் ஆண்டிஸ் மலைகளுக்குச் சொந்தமான ஒரு தாவரமாகும். இந்த தாவரம், குறிப்பாக பெரு, ஈக்வடார், கொலம்பியா மற்றும் பொலிவியா போன்ற நாடுகளில் காணப்படுகிறது.
சின்கோனா மரங்களின் பட்டையில் க்வினீன் உள்ளது. இது, பல நூற்றாண்டுகளாக மலேரியா எதிர்ப்பு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.