கொழும்பு மாவட்டத்தில் உள்ள ஏழு முக்கிய உள்ளூராட்சி நிறுவனங்கள், குப்பை சேகரிப்பின் போது
பெம்பஸ் போன்ற சுகாதாரக் கழிவுகளை ஏற்றுக்கொள்வதை நிறுத்திவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கெஸ்பேவ நகரசபை, தெஹிவளை - கல்கிஸை நகரசபை, மொரட்டுவ நகரசபை, பொரலஸ்கமுவ நகரசபை, ஹோமாகம நகரசபை, மஹரகம நகரசபை மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே நகரசபை ஆகிய நகரசபைகளின் உள்ளூராட்சி மன்றங்கள், சிறு குழந்தைகள் மற்றும் பெரியவர்களால் பயன்படுத்தப்படும் பெம்பஸ் போன்ற சுகாதாரக் கழிவுகளை ஏற்றுக்கொள்ளாததால், அப்பிரதேசங்களிலுள்ள மக்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
இந்த உள்ளூராட்சி நிறுவனங்களால் சேகரிக்கப்படும் குப்பைகள், கரதியான குப்பை மேட்டுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
கரதியான குப்பை மேட்டின் நிர்வாகம், மக்கிப்போகும் கழிவுகளுடன், மக்காத பெம்பஸ் போன்ற சுகாதாரக் கழிவுகளைக் கொண்டுவர வேண்டாமென்று, மேற்படி உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு அறிவித்துள்ள அதேவேளை, அவ்வாறான கழிவுகளைக் கொண்டுவருவதாயின் பெம்பஸ் போன்ற சுகாதாரக் கழிவுகள், ஏனைய கழிவுகளுடன் கலக்காது, பிரித்து தனியாக "எரிக்கக்கூடிய வகை"யில் கொண்டுவருமாறும் அறிவுறுத்தியுள்ளது. அவ்வாறு செய்தால், அவை மின்சார உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் என்றும் கரதியான நிர்வாகம் கூறியுள்ளதாகக் கூறப்படுகிறது.
உள்ளூராட்சிமன்றங்களினால் "எரிக்கக்கூடிய வகையின்" கீழ் பெம்பஸ் போன்ற சுகாதாரக் கழிவுகளை அனுப்ப நடவடிக்கை எடுத்தால், அந்தக் கழிவுகளை எரிப்பதன் மூலம் பெறப்படும் மின்சாரத்தை, கரதியான மின் நிலையத்தில் பயன்படுத்தலாம் என்று அந்நிர்வாகம் கூறுகிறது.
கரதியான குப்பை மேட்டு, ஒரு நாளைக்கு 450 முதல் 500 மெற்றிக் தொன் குப்பை கிடைக்கின்றது. அதில் 250 முதல் 280 மெற்றிக் தொன் வரையான குப்பைகள் மக்கிப்போகும் கழிவுகளாகக் காணப்படும். அத்துன், கரதியான குப்பை மேட்டில் சேகரிக்கப்படும் 150 முதல் 180 மெற்றிக் தொன் கழிவுகள், தினமும் மின்சாரம் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.
இலங்கையின் மிகப்பெரிய உரம் தயாரிக்கும் தளம், கரதியானவில் உள்ளது. மேலும் ஆறு உள்ளூராட்சிமன்றங்களால் கொண்டுவரப்படும் கழிவுகளைப் பயன்படுத்தி உரம் உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது. இந்த வழியில் உற்பத்தி செய்யப்படும் உரம், இலங்கை விவசாய நிலங்களுக்கும் மாலைத்தீவு மற்றும் டுபாய் போன்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
உரம் தயாரிக்கும் போது, 70 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் ஒரு குறிப்பிட்ட அளவு நுண்ணுயிரிகள் இறந்தாலும், உரம் தயாரிக்கும் போது பெம்பஸ் போன்ற கழிவுகளை அதற்குக் கலப்பது சிக்கலை ஏற்படுத்தும் என்றும், பெம்பஸ் கழிவுகளை பிரித்து எரிப்பதற்கு மட்டுமே வழங்க வேண்டும் என்றும் உள்ளூராட்சிமன்றங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பெம்பஸ் கழிவுகள் கரிம உரப் பொருட்களில் உள்ள கழிவுகளுடன் கலக்காது.
அத்துடன், கரதியான குப்பை மேட்டில், சுகாதாரக் கழிவுகளை ஏனைய குப்பைகளிலிருந்து பிரிக்கப் போதுமான தொழிலாளர்கள் இல்லாததும் ஒரு பிரச்சனையாக மாறியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
உள்ளூராட்சி நிறுவனங்கள், பெம்பஸ் போன்றவற்றை நிர்வகிக்கும் மத்திய சுற்றுச்சூழல் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களை நேரடியாகத் தொடர்புகொண்டு அவற்றை சேகரிக்கச்செய்ய வேண்டும் என்றும், இந்த நிறுவனங்கள் வீடுகளில் இருந்து சுகாதாரக் கழிவுகளை முறையான அமைப்பின் மூலம் சேகரிக்கும் என்றும் கரதியான குப்பை மேட்டு நிர்வாகம் கூறுகிறது.
இந்தப் பெம்பஸ் போன்ற சுகாதாரக் கழிவுகள் பிரச்சினையால், மஹரகம நகர சபையானது, கொடிகமுவ - நீலம்மஹார வீதியில் வசிப்பவர்களிடமிருந்து சுகாதாரக் கழிவுகளை சேகரிப்பதை மூன்று வாரங்களாக நிறுத்தியுள்ளது. இதன் விளைவாக வீதியோரங்களில் கழிவுகள் குவிந்து கிடப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
-அருண