வடக்கு மாகாணத்தில் தமிழ் மக்களின் சுமார் ஆறாயிரம் ஏக்கர் காணிகளை சுவாஹா செய்வதற்கு - கபளீகரம்
பண்ணுவதற்கு - தந்திரமாகக் காய் நகர்த்தியிருக்கும் அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான சிங்கள - பௌத்த பேரினவாத அரசு, அந்த எத்தனத்துக்கு எதிராக தமிழ் மக்களின் எதிர்ப்புக் கடுமையாகக் கிளம்பியிருப்பதன் பின்னணியில், அதைச் சமாளிப்பதற்கும் அதனை ஒட்டி தமிழ் மக்களின் காதில் பூச்சுற்றுவதற்கும் அடுத்தகட்டத் தந்திரத்தை ஆரம்பித்திருக்கின்றது.
அந்தக் காணி கபளீகரத்துக்கு வழிசெய்யும் வர்த்தமானி அறிவித்தலில் உள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துவதைத் தற்காலிகமாக இடைநிறுத்துவதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அரசாங்கம் அறிவித்துள்ளது.
அதுதான் அரசின் அடுத்தகட்ட ஏமாற்றுத் தந்திர வேலை. இந்த வர்த்தமானி அறிவித்தலில் உள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துவதைத் தற்காலிகமாக இடைநிறுத்துவது எந்தவொரு தரப்பினருக்கும் நிரந்தர தீர்வைப் பெற்றுத்தராது எனச் சுட்டிக்காட்டியுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன், எனவே அவ்வர்த்தமானி அறிவித்தல் முழுமையாக வாபஸ் பெறப்பட வேண்டும் என மீள வலியுறுத்தியுள்ளார்.
மேற்படி வர்த்தமானி அறிவித்தலின் கீழ் சம்பந்தப்பட்ட காணிகளுக்கா ன உரிமையை நிறுவுவதற்குத் தவறும் பட்சத்தில் அல்லது காணிகளுக்கு உரிமை கோராதவிடத்து, அக்காணிகள் கட்டாயமாக அரசுடைமையாக்கப்பட வேண்டும் என, காணி நிர்ணய கட்டளைச் சட்டத்தின் 5 (1)ஆம் பிரிவில் வலியுறுத்தப்பட்டிருப்பதை அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
ஆகவே, அரசாங்கம் அறிவித்துள்ளவாறு, தற்காலிக இடைநிறுத்தம் எந்தவொரு தரப்பினருக்கும் நிரந்தர தீர்வைப் பெற்றுத்தராது, ஆகையினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் முழுமையாக வாபஸ் பெறப்பட வேண்டும் எனவும் சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
‘‘காணிக் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் இந்த வர்த்தமானியை இடைநிறுத்த முடியாது. அதற்கான சட்ட ஏற்பாடுகள் ஏதும் கிடையாது. மூன்று மாத காலத்துக்குள் உரித்துக்களை உறுதிப்படுத்தாவிடின் தமிழ் மக்களின் தனியார் காணிகள் மற்றும் பொதுக் காணிகள் அரசுடமையாக்கப்படும் என்பதை உறுதியாக குறிப்பிட முடியும். ஆகவே, இந்த வர்த்தமானியை மீளப்பெற வேண்டும்.
அதுவே இந்தப் பிரச்சினையைத் தீர்க்க ஒரே வழி’’ - என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பியும் சுட்டிக்காட்டியிருக்கின்றார். தமிழ் மக்களின் காணிகளைப் பிடுங்கும் இந்த அரச அடாவடித்தனம் இங்கு அரங்கேறும் போது, ஆளும் தரப்புக்குச் செம்புகாவும் மூன்று யாழ் மாவட்ட எம்.பிக்களும், நியமன எம்.பி பதவி மூலமான ஓர் அமைச்சரும் இவ்விடயங்கள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்காமல் பம்மிக்கொண்டிருக்கின்றனர்.
இப்போதாவது உண்மையை உணர்ந்து - ஆளுந்தரப்புக்கு சாமரம் வீசும் சின்னத்தனத்திலிருந்து வெளியே வந்து - அவர்கள் தமிழ் மக்களின் உரித்துக் குறித்துக் குரல் எழுப்ப வேண்டும். அதுதான் தங்கள் மக்களுக்கு அவர்கள் செய்யக் கூடிய நியாயமாகும்.
-முரசு ஆசிரியர் தலையங்கம்