உப்பு இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை அரசாங்கம் தற்காலிகமாக நீக்கியுள்ளதால், இந்தியாவில்
இருந்து உப்பு உடனடியாக இறக்குமதி செய்ய ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும், அடுத்த 10 நாட்களுக்குள் உப்பை இறக்குமதி செய்ய முடியும் என்றும் அத்தியாவசிய உணவு இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டில் தற்போது நிலவும் உப்பு பற்றாக்குறைக்கு தீர்வாக இந்தியாவிலிருந்து 30,000 மெட்ரிக் தொன் உப்பை இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளதாக, இலங்கை உப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த 2 வருடங்களாக பெய்த மழை காரணமாக, நாட்டில் எதிர்பார்த்தளவு உப்பு உற்பத்தியை மேற்கொள்ள முடியவில்லை என்று அதன் தலைவர் டி. நந்தன திலக்க தெரிவித்தார்.
நாட்டில் தற்போது உள்ள உப்பு கையிருப்பு, பொதுவாக நாட்டின் தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமானது என்றும் தெரிவித்த அவர், இருப்பினும் நியாயமற்ற பயம் காரணமாக நுகர்வோர் அதிக உப்பை வாங்குவதால் உப்பு பற்றாக்குறை உருவாகி வருவதாக கூறுகிறார்.
நிலைமையைக் கருத்திற்கொண்டு, இந்தியாவிலிருந்து ஒரு பங்கு உப்பு இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். இந்த இறக்குமதி அளவு நாட்டிற்கு மூன்று மாத காலத்திற்கு போதுமானதாக இருக்கும் என்றும் அவர் கூறுகிறார்.
இதேவேளை, நாட்டின் தினசரி உப்பு தேவை ஐநூறு மெட்ரிக் தொன்னாகக் காணப்படுகிறது என்று தெரிவித்த கூட்டுறவு அமைச்சர் வசந்த சமரசிங்க, அதன்படி ஒருவர், ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ஏழு கிராம் உப்பு மட்டுமே உட்கொள்ள முடியும் என்றும், ஐநூறு மெட்ரிக் தொன் உப்பை வழங்க முடியாத நாடு எதுவும் இல்லை என்றும் கூறினார்.
இருப்பினும், சமீபத்திய காலங்களில் பெய்த தொடர் மழையால் உப்பு உற்பத்தி சரிந்ததால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது என்றும் இதன் விளைவாக, உப்பை இறக்குமதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் நாட்டில் தேவையான அளவு உப்பு உற்பத்தி செய்யப்படும் வரை அதை இறக்குமதி செய்து சந்தையில் வெளியிட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.