கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த பாடசாலை மாணவியின் மரணம் தொடர்பில்
குற்றம் சாட்டப்பட்டுள்ள தனியார் கல்வி நிறுவன உரிமையாளர் சிவானந்த ராஜா மீது நடவடிக்கை எடுக்கப்படாது என சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் சட்ட நடைமுறையாக்கல் பிரிவின் பணிப்பாளர் சஜீவனி அபேகோன் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த சிறுமியின் தாயாரின் வாக்குமூலத்தை மட்டும் அடிப்படையாக கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் குறித்த தனியார் வகுப்பில் கல்வி பயிலும் 20 மாணவர்களிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனினும், குறித்த சம்பவத்துடன் தனியார் கல்வி நிறுவனருக்கு தொடர்பு இருப்பதாக எந்தவொரு மாணவரும் நேரடி வாக்குமூலம் அளிக்கவில்லை.
இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் தொடர்ச்சியான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக சஜீவனி அபேகோன் கூறியுள்ளார்.
இதேவேளை, உயிரிழந்த மாணவி கடந்த வருடம் தவறான முறைக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் தகவலில் உள்ள உண்மையை கண்டறிய பாடசாலையின் அதிபரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.