இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளின் சடலங்களில் காணப்பட்ட நகைகளை இலங்கை இராணுவத்தினர்
திருடியதாக இறுதி யுத்த களத்தில் இருந்து பாதிக்கப்பட்ட வயோதிப பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் இன்றைய தினம் யாழ். சாங்கானை பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
தடை கற்களை படிக்கற்களாக பாவித்து நாங்கள் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் முன்னேறிக்கொண்டிருந்தோம். அப்போது இராணுவம் எங்களை நோக்கி சுட்டது.
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த எங்களது உறவுகளின் உயிரற்ற உடல்களை நாங்கள் தாண்டி வந்து கொண்டிருந்தோம். அந்த சமயம் இராணுவத்தினர், இறந்து கிடந்த உறவுகளின் உடல்களில் காணப்பட்ட நகைகளை கழற்றி தங்களது சப்பாத்துகளிலும், உடைகளிலும் மறைத்து வைத்ததை அவதானித்தோம்.
நாங்கள் உயிர்களை மாத்திரம் இழக்கவில்லை, எங்களது உடைமைகளையும் இழந்தோம். இறுதி நேரத்தில் உணவுக்கே பாரிய நெருக்கடியை எதிர்நோக்கினோம். இறுதியில் இருந்த வாகனங்கள் உட்பட அனைத்து சொத்துகளையும் விற்று கஞ்சி காய்ச்சி குடித்து உயிரை தக்கவைத்தோம்.
இருப்பினும் 12, 13ஆம் திகதிகளில் அந்த கஞ்சிக்கே வழியில்லாத நிலை ஏற்பட்டது. அரிசி இல்லை, சமைப்பது என்றால் பாத்திரங்கள் இல்லை, உடைகள் இல்லை, பெண்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கான வசதிகள் இல்லை. தொடர்ந்து யுத்தம் நடக்கும்போது ஓடிக்கொண்டிருந்தோம். இன்றைக்கும் எங்களால் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை எமக்கு உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.