கொட்டாஞ்சேனை - கல்பொத்த வீதியிலுள்ள ஜன நிவாச வளாகத்தில் வசித்து வந்த 16 வயது பாடசாலை
மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக, தனியார்க் கல்வி நிறுவனத்தின் உரிமையாளர், இன்று (09) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
தனது பெயருக்கு களங்கம் விளைவிக்க ஒரு குழுவினரால் வேண்டுமென்றே மேற்கொள்ளப்படும் பிரச்சாரம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்த மாணவி நோய்வாய்ப்பட்டிருந்ததால், அவருடைய பெற்றோரை அழைத்து, நோய் குணமானதும் தனியார் வகுப்புக்கு அனுப்புமாறு மாத்திரமே தான் அவர்களைக் கோரியதாகவும், கல்வி நிறுவனத்தின் உரிமையாளர் செய்துள்ள முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தனது படங்களைப் பயன்படுத்தி சமூக ஊடகங்களில் தன் மீது கடுமையான விமர்சனங்கள் சுமத்தப்படுவதால் தான் அசிங்கப்பட்டுள்ளதாகவும், யாரோ வேண்டுமென்றே இதைச் செய்கிறார்கள் என்று சந்தேகிப்பதாகவும் சம்பந்தப்பட்ட நபர் கூறியுள்ளார்.
கொட்டாஞ்சேனை - கல்போத்த வீதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த தில்ஷி அம்ஷிகா என்ற 16 வயது மாணவி, கடந்த 29ஆம் திகதியன்று, 6ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
பம்பலப்பிட்டியில் உள்ள ஒரு பாடசாலையில் படித்து வந்த அந்த மாணவி, அங்குள்ள ஒரு ஆசிரியரால் பாலியல் ரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார் என்று இது விவகாரத்தில், தனியார் பயிற்சி வகுப்பு உரிமையாளராலும் அம்மாணவ மன அழுத்தத்துக்கு ஆளானதாகக் கூறப்படுகின்ற நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.