சிலி மற்றும் அர்ஜென்டினாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தென் அமெரிக்கா கண்டத்தில் அமைந்துள்ள சிலி நாட்டில் மாகல்லன்ஸ் பகுதியில் உள்ள புவேர்ட்டோ வில்லியம்ஸுக்கு தெற்கே 218 கிலோமீற்றர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் 7.5 ஆக பதிவாகி இருக்கிறது.
சிலி சுனாமி எச்சரிக்கையை விடுத்துள்ளதுடன், நாட்டின் கரையோரப் பகுதியிலுள்ள மக்கள் வெளியேற வேண்டும் என்றும் கூறியுள்ளது.
சிலியின் தெற்கு முனையில் உள்ள தொலைதூர மக்கலன்ஸ் பகுதிக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அர்ஜென்டினாவின் உஷுவாயா நகரின் கடற்கரையிலிருந்து 219 கி.மீ (136 மைல்) தொலைவில் வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி 13:58 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதென்று, அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, தனது X கணக்கில் பதிவொன்றை இட்டுள்ள சிலி ஜனாதிபதி கேப்ரியல் போரிக், "மாகல்லன்ஸ் பகுதி முழுவதிலுமுள்ள கடற்கரையோர மக்களை வெளியேற்றுமாறு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்" என்று கோரியுள்ளார்.
இதேவேளை, சிலியின் அனர்த்த முகாமைத்துவ நிறுவனம், குடியிருப்பாளர்கள் அமைதியாகச் செயல்பட வேண்டுமென்றும் அதிகாரிகள் மற்றும் மீட்புக் குழுக்களின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் அறிவுறுத்தியுள்ளது.
இது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்றும், கடல் மட்டத்திலிருந்து 30 மீற்றர் உயரத்தில் உள்ள பாதுகாப்பான பகுதிகளுக்கு குடியிருப்பாளர்களை வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும், உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.