சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, நாளை (01) விசேட பொலிஸ் பாதுகாப்பு மற்றும்
போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படும் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் பிற அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்படும் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கொண்டாட்டங்களுக்கு இந்தப் பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது.
அதன்படி, காலி முகத்திடல், பிரேமதாச சிலைக்கு அருகிலுள்ள வாழைத்தோட்டம், ஆர்மர் வீதி, பீ.டீ. சிறிசேன மைதானம், ஹைட் பார்க் மைதானம், தபால் அலுவலக தலைமையகம், நூலக கேட்போர்கூட வளாகம், விஹாரமகாதேவி வெளிப்புற பூங்கா, கொஸ்கஸ் சந்தி, பாலா தம்போ ஒழுங்கையின் சங்கத் தலைமையகம் உள்ளிட்ட பல பகுதிகளில் அரசியல் கூட்டங்கள், அஞ்சலி மற்றும் பேரணிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அதேபோல், வெளி மாகாணங்களில் நடைபெறவுள்ள மே தினப் பேரணிகள், கூட்டங்கள் மற்றும் நினைவேந்தல்கள் தொடர்பாக தேவையான பாதுகாப்பு, வாகன போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் பாதை பாதுகாப்பு ஆகியவற்றை உரிய முறையில் வழங்குவதற்கு மாகாணங்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள், மாவட்டங்களுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர்கள் மற்றும் பிரிவுகளுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு பொலிஸ் தலைமையகத்தால் ஏற்கனவே தேவையான அறிவுறுத்தல்களும் உத்தரவுகளும் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
மேலும், அந்த அறிக்கையில், கொழும்பு நகரில் 15 இடங்களில் பேரணிகள், கூட்டங்கள் மற்றும் நினைவேந்தல்கள் நடைபெறவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொழும்பு நகரம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் நடைபெறவுள்ள மே தினப் பேரணிகள், கூட்டங்கள் மற்றும் நினைவேந்தல்களால் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படுமாயின், அப்பகுதிகளைத் தவிர்த்து மாற்று வீதிகள் வழியாக வாகன போக்குவரத்தை மேற்கொள்ளுமாறு பொலிஸார் சாரதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், மாற்று வீதிகள் பற்றிய தகவல்கள் தேவைப்படும் போது, வாகன போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர்களிடமிருந்து உதவி பெறலாம் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.