புனித பாப்பரசர் பிரான்சிஸ் நேற்று கர்த்தருக்குள் மீளாத் துயில் கொண்டமையை அடுத்து
புதிய பாப்பரசர் தெரிவு பற்றிய பேச்சுக்கள், தகவல்கள் ஊடகங்களில் வெளியாகத் தொடங்கியுள்ளன.
காலமான பாப்பரசர் பிரான்சிஸின் இறுதிக் கிரியைகள் முடிவடைந்த பின்னர் புதிய பாப்பரசர் தெரிவு ரோமில் நடைபெறும்.
தற்போதைய பாப்பரசரின் மறைவையொட்டி ஒன்பது நாள்கள் துக்கம் அனுஷ்டிக்கப்படும். அதன் பின்னர் புதிய பாப்பரசர் தெரிவு இடம்பெறும். அதற்கு இன்னும் 15 முதல் 20 நாள்கள் எடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
வழக்கமாக சுமார் 120 இற்கு உட்பட்ட கர்தினால்கள் கொண்ட கர்தினால்கள் அவையே புதிய பாப்பரசரை வாக்களிப்பு மூலம் தெரிவு செய்யும். எனினும், தற்போது 135 கர்தினால்கள் வாக்களிக்கக் கூடிய தகுதியில் இருக்கின்ற காரணத்தினால் அவர்கள் அனைவரையும் வாக்களிக்க அனுமதிக்கக் கூடும் என்ற ஒரு கருத்து நிலவுகின்றது.
அடுத்த பாப்பரசர் யார் என்பது தொடர்பில் பலவித செய்திகள் உலக ஊடகங்களில் வெளியாகி வருகின்றன. அதில் ஒன்றான நியூயோர் போஸ்ட் வெளியிட்ட ஊகத்தில் முதல் ஆறு நிலைகளில் உள்ள கர்தினால்களில் ஐந்தாவது இடத்தில் இலங்கையைச் சேர்ந்த ஒரேயொரு கர்தினாலான பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்தப் பத்திரிகை வெளியிட்ட பட்டியலின் ஒழுங்கு விதி வருமாறு:-
01. கர்தினால் லுயிஸ் டக்ளே (67 வயது - பிலிப்பீன்ஸ்)
02. கர்தினால் பிற்றோ பரொலின் (70 வயது - இத்தாலி)
03. கர்தினால் ஜீன் மார்க் அவலின் (66 வயது - பிலிப்பீன்ஸ்)
04. கர்தினால் வில்லியம் ஜக்கோபஸ் இஜிக் (71 வயது - டென்மார்க்)
05. கர்தினால் மெல்கம் ரஞ்சித் (வயது 77 - இலங்கை)
06. கர்தினால் றொபர்ட் சரா (வயது 79 - கயானா)