ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கண்காணிக்கவும்,
வழக்குத் தொடரவும் முழு அதிகாரங்களுடன் கூடிய சுயாதீனமான வழக்குரைஞர் அலுவலகத்தை நிறுவுமாறு கொழும்பு பேராயர் கார்டினல் மெல்கம் ரஞ்சித், ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கும் சஹாரான் ஹசிமுக்கும் இடையிலான தொடர்பு தொடர்பில் சனல் 4 ஊடகம் முன்வைத்துள்ள உண்மைகள் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் கார்டினல் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் ஆறாவது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் நடைபெற்ற பிரதான வழிபாட்டில் பங்கேற்று உரையாற்றும் போதே கொழும்பு பேராயர் கார்டினல் மெல்கம் ரஞ்சித் இவ்வாறு தெரிவித்தார்.
அத்துடன், உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் பற்றிய உண்மையை மறைக்க முந்தைய அரசியல் தலைமைகள் மேற்கொண்ட முயற்சி, இன்றும் சில அரசு நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தப்படுவதாக ஆண்டகை தெரிவித்துள்ளார்.
தோற்கடிக்கப்பட்ட அரசியல் சக்திகளின் கட்டுப்பாட்டின் கீழ் பல்வேறு அரசு நிறுவனங்களை இயக்கும் ஒரு தரப்பு செயல்பட்டு வருவதாகவும் ரஞ்சித் ஆண்டகை கூறினார்.
"ஈஸ்டர் தாக்குதலுக்குப் பிறகு, அப்போதைய சட்டமா அதிபராக இருந்த சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா, இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் ஒரு பெரிய சதி இருப்பதாகக் கூறப்பட்டதைக் கொஞ்சம் ஏனும் பொறுப்படுத்தாது அந்த பதவிக்கு பின்னர் வந்த சட்டமா அதிபர்களுடன் சட்டமா அதிபர் திணைக்களம் இந்த தாக்குதலின் பின்னணி மற்றும் அதன் சட்ட நடவடிக்கைகளில் மந்தமாக செயற்பட்டனர்.
மேதகு ஜனாதிபதி அவர்கள் இந்தப் பணியை மிகுந்த ஆர்வத்துடன் மேற்கொண்டு, உயர் அதிகாரிகள் குழுவை இதற்கு தலைமை தாங்க நியமித்திருந்தாலும், தற்போதுள்ள சட்ட அமைப்பும், அதை செயல்படுத்துவதற்குப் பொறுப்பான சில அதிகாரிகளின் மெத்தனப் போக்கும் பல்வேறு தடைகளுக்கு மத்தியில் எதிர்காலப் பணிகளை மேற்கொள்ளும் சூழ்நிலைக்கு வழிவகுத்துள்ளது.
இலங்கை நாட்டை இரத்தத்தால் நனைத்த சில அரசியல் மற்றும் குண்டர் சக்திகளை அம்பலப்படுத்தி, தேவையான அரசியலமைப்பு மற்றும் சட்ட மாற்றங்களைச் செய்வதன் மூலம், கொலைகள், காணாமல் போதல்கள், வெள்ளை வேன்கள், சித்திரவதைக் கூடங்கள், பாதாள உலக நடவடிக்கைகள் போன்றவற்றின் மூலம் நமது வரலாற்றைக் கறைபடுத்தியவர்களை இனங்கண்டு நீதியின் முன் நிறுத்துவதற்கு அரசாங்கம் விரைவில் நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கையில், மக்கள் தற்போதைய அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெறுபான்மையை வழங்கினர்.
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல், நீண்ட கண்ணீர் நிறைந்த கதையின் மற்றொரு அத்தியாயம். தற்போதைய சட்டங்கள் நீதியை நிலைநாட்டவும், நாட்டை சுத்தப்படுத்தவும் போதுமானதாக இல்லாவிட்டால், நாம் செய்ய வேண்டியது அந்தச் சட்டங்களை மாற்ற தைரியம் பெறுவதுதான். அதற்காக இந்த நாட்டின் பொதுமக்கள் தற்போதைய அரசாங்கத்தை உற்சாகமாக ஆதரித்துள்ளனர் என்பது தெளிவாகிறது.
அதன்படி, பயங்கரவாதத்தைத் தூண்டிய இந்த ஜனநாயக விரோத மற்றும் அரசியல் ரீதியாக ஊக்கமளிக்கும் செயல்கள் அனைத்தையும் நமது சமூகத்திலிருந்து தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மேன்மைதங்கிய ஜனாதிபதியை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
"ஜனாதிபதி அவர்களே, நீங்கள் 2024 ஒக்டோபர் மாதம் 6ஆம் திகதி நீர்கொழும்பில் உள்ள கட்டுவாபிட்டியில் உறுதியளித்தபடி, இந்தத் தாக்குதலில் சிந்தப்பட்ட அப்பாவி மக்களின் இரத்தம் மறைந்துவிடாது, இதன் உண்மையான பின்னணியைக் கண்டுபிடித்து சம்பந்தப்பட்ட அனைவரையும் நீதியின் முன் நிறுத்துவீர்கள் என்பது எங்கள் உண்மையான நம்பிக்கை" என்றார்.