“தையிட்டி விகாரைக்கு எதிரான மக்களின் போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியோ

அல்லது வேறு தமிழ்க் கட்சிகளோ பாதிக்கப்பட்ட மக்களின் விருப்பங்களுக்கு மாறாக எந்தவொரு கருத்தையும் வெளிப்படுத்தவில்லை. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க யாழ்ப்பாணத்தில் தெரிவித்த விடயங்கள் அனைத்தும் தேசிய மக்கள் சக்தியின் கருத்துக்கள் அல்ல. உண்மையான ஜே.வி.பியின் முகத்தையே அநுரகுமார வெளிக்காட்டியிருக்கின்றார்” இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம், கொக்குவிலில் அமைந்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யின் தலைமைக் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கடந்த வியாழக்கிழமை ஜே.வி.பி கட்சியின் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருந்தார். தேர்தலுக்கு முன்னதாக, காணி விடுவிப்பு, தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை, பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் நீக்கப்படும் போன்ற பல்வேறு வாக்குறுதிகளை அநுரகுமார வழங்கியிருந்தார். எனினும், ஏற்கனவே வழங்கப்பட்ட வாக்குறுதிகள் தொடர்பில் எதுவும் பேசாமல் தையிட்டி விகாரை தொடர்பில் அவர் பேசியிருக்கின்றார்.

பாதிக்கப்பட்ட மக்களுடனும், நாகதீப விகாரையின் விகாராதிபதி, ஆரியகுளம் நாக விகாரையின் விகாராதிபதி போன்ற மதத் தலைவர்களுடன் பேசி தையிட்டி விகாரைப் பிரச்சினைக்கு தீர்வைக் காண முடியும். ஆனால், வடக்கு மற்றும் தெற்கில் உள்ள அரசியல்வாதிகள் இந்த விடயத்தில் தலையிட்டால் தீர்வைக் காண முடியாது என ஜனாதிபதி தெரிவித்திருக்கின்றார்.

குறிப்பாக வடக்கில் செயற்படக்கூடிய அரசியல் கட்சிகள் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்குத் தடையாக இனவாதப் போக்கோடு செயற்படுகின்றன என்று ஜனாதிபதி குற்றஞ்சாட்டியிருந்தார்.

தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள விகாரையானது ஒரு சட்டவிரோத கட்டடமாகும். அதில் தொல்பொருள் திணைக்களம் சம்பந்தப்படவில்லை. தொல்பொருள் தொடர்பாக முக்கியத்துவம் பெறுகின்ற எந்தவொரு கண்டுபிடிப்பும் அந்த நிலப்பரப்பில் காணப்படவில்லை. மாறாக தையிட்டி விகாரைக்குரிய காணி எனக் கூறி பொதுமக்களின் 20 பரப்புக் காணி ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றது. தையிட்டி விகாரைக்குரிய அடிக்கல் நாட்டப்பட்டு ஒரு சில தினங்களிலேயே தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எதிர்ப்பு வெளியிடப்பட்டது. அதன் பின் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திலும் ஏகமனதாகக் கட்டுமானங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது.

எனினும், அதியுயர் பாதுகாப்பு வலயம் எனும் போர்வையில் சட்டவிரோதமாக மக்களின் காணிகளில் விகாரை அமைக்கப்பட்டது. அந்த நாள் தொடக்கம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாதிக்கப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுத்து வருகின்றது. பாதிக்கப்பட்ட மக்களுக்குத் துணையாக அவர்களின் போராட்டங்களில் கலந்துகொண்டு வருகின்றோம்.

தையிட்டி விகாரைக்கு எதிரான மக்களின் போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியோ அல்லது வேறு தமிழ்க் கட்சிகளோ பாதிக்கப்பட்ட மக்களின் விருப்பங்களுக்கு மாறாக எந்தவொரு கருத்தையும் வெளிப்படுத்தவில்லை. ஆனால், யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த ஜனாதிபதி அநுரகுமார, பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிரான நிலைப்பாட்டில் தமிழ் கட்சிகள் இருக்கின்றன என்று தெரிவித்திருக்கின்றார்.

தாங்கள் இனவாதத்துக்கு இடமளிக்கப்போவதில்லை என அநுரகுமார ஒவ்வொரு மேடைகளிலும் கூறுகின்றார். அநுரகுமார யாரை இனவாதிகள் எனக் கூறினாரோ அந்தத் தரப்புகளே பொதுமக்கள் பாதிப்படையும் வகையில் தையிட்டி விகாரையைச் சட்டவிரோதமாக அமைத்தார்கள்.

பாதிக்கப்பட்ட மக்களின் நியாயமானபோராட்டத்தையும் இனவாதம், மதவாதம் எனும் தவறான பரப்புரைகளை தெற்கில் செய்து வந்தார்கள். ஆனால், இன்று அநுரகுமாரவும் இனவாதிகள் செய்த அதே செயலையே செய்கின்றார். எந்த வொரு வித்தியாசமும் இல்லை.

தேசிய மக்கள் சக்திக்கு யாழ்ப்பாணம் மக்கள் ஆணை தந்திருப்பதாகக் கூறி வருகின்ற நிலையில் தையிட்டி விகாரை பிரச்சினையைத் தீர்த்திருக்கலாம். ஆனால், அதை விடுத்து தமிழ் அரசியல்வாதிகள் குழப்புகின்றனர் என்று குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.

இவ்வாறு போலியான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதற்கான காரணம் அநுர அரசு முன்னெடுக்கும் இனவாதத்தை மூடி மறைக்கவே ஆகும். தமிழ் மக்களின் காணிகளை அபகரிக்கும் இனவாதப் பிக்குகளைக் காப்பாற்றும் வகையிலே இந்த அரச தரப்பினரும் செயற்படுகின்றார்கள்.

வடக்கு, கிழக்கில் சட்டவிரோதமாக அமைக்கப்படும் விகாரைகள் அனைத்தும் இராணுவத்தினராலே அமைக்கப்படுகின்றன. இராணுவத்தை வைத்து மக்களை மிரட்டி மக்கள் எதிர்க்க முடியாதவாறு ஆக்கிரமிப்புக்கள் தொடர்கின்றன. தையிட்டியில் பாதிக்கப்பட்ட மக்கள் தமிழ் அரசியல்வாதிகளோடு நிற்பதை அரசு தடுக்க முயல்வது, மக்களை அச்சுறுத்தி அந்தக் காணிகளை தங்கள் தேவைக்கு அபகரிப்பதற்காவே. நாங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்காவே செயற்படுகின்றோம்.

எங்கள் மக்கள் விரும்பினால் போராட்டங்களில் இருந்து விலகவும் தயார். ஆனால், தமிழ் மக்களை அச்சுறுத்தி அவர்களின் கோரிக்கைகளை மாற்ற ஜே.வி.பி முயன்றால் ஜே.வி.பியே ஏமாற்றமடைவார்கள்.

ஜனாதிபதி அநுரகுமார யாழ்ப்பாணத்தில் தெரிவித்த விடயங்கள் அனைத்தும் தேசிய மக்கள் சக்தியின் கருத்துக்கள் அல்ல. அவை ஜே.வி.பியினுடைய சித்தாந்தங்களே. உண்மையான ஜே.வி.பியின் முகத்தை ஐனாதிபதி வெளிக்காட்டியிருக்கின்றார். அதை எங்களுடைய மக்கள் உணர்ந்து இந்தத் தேர்தலில் முடிவுகளை எடுக்க வேண்டும்” என்றார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி