காவி உடை உடுக்கவே பொருத்தமில்லாத சிலரால் வடக்கில் புத்தபெருமானின்

திருவுருவச்சிலைகள் நிலஆக்கிரமிப்பின் எல்லைக்கற்களாக பயன்படுத்தப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை பௌத்த விகாரை ஒன்றையும், அசோகச்சக்கரத்தையும் தனது சின்னமாக கொண்ட  இலங்கை தொல்பொருள் திணைக்களம், எவ்வாறு இலங்கையில் உள்ள எல்லாமதத்தவர்களின் தொல்லியலையும் நடுநிலமையுடன் கையாளக்கூடிய திணைக்களமாக இருக்கமுடியும் எனவும் அவர் இதன்போது கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றில் இன்று (17) கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

“புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அமைச்சர் அவர்களே, பிரதியமைச்சர் அவர்களே, தற்போது அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 159 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இனவாத மதவாத கருத்துக்களைத் தெரிவிக்காது, எல்லோரையும் அணைத்துக்கொண்டு செல்லவேண்டுமென்ற எண்ணத்துடன் செயற்படுவதை அவதானிக்க முடிகின்றது.

“குறிப்பாக பெரும்பான்மையின மக்களில் பெரும்பாலானவர்கள்கூட இனவாதத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதற்குச் சான்று தற்போதைய அரசாங்கமாகும். இதற்கு முன்னர் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை மாத்திரம்கொண்டிருந்த தற்போதய அரசாங்கம் 159 ஆசனங்களைப் பெற்று ஆட்சிபீடத்திலுள்ளீர்கள். இதற்கு முன்னர் இருந்த சில இனவாதிகள் நீக்கப்பட்டுள்ளனர்.

“நான் வன்னித் தேர்தல்தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர். முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்தவன். அந்த வகையில் அங்கு இடம்பெற்ற, இடம்பெறும் பிரச்சினைகளைத் தெளிவாக சொல்கின்றேன். இந்த நாட்டைக் கட்டியெழுப்பவேண்டும் என்ற நோக்குடன்தான் நாம் செயற்படுகின்றோம். அந்தவகையில் உங்களின் ஒத்துழைப்பை நாடுகின்றோம்.

“ஒரு நீதியானதும், நேர்மையானதுமா ஆட்சி அமைந்து நாடு முன்னேற்றம் அடையும் விடயத்தில் எமக்கு மாற்றுக்கருத்தில்லை. அதற்கு எமது ஒத்துழைப்புக்களும் இருக்கும். இந்துத்தம்பதிகளான சுத்தோதனருக்கும் மாயாதேவிக்கும் பிறந்து யசோதரையைத் திருணம் செய்த சித்தாத்தரே புத்தபிரான் ஆவார்.

“அவரது போதனைகளை பின்பற்றி அவரது பஞ்சசீலக் கொள்கைகளின் அடிப்படையில் ஒழுகுவோர் பௌத்தர்கள் எனப்பட்டனர். இந்துமதமும், பௌத்தமதமும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்தவை. தென்ஆசியாவின் பிரதான மதங்களான இவை, தென்னாசியா எங்கும் இணைமதங்களாகவே அனுஸ்டிக்கப்படுகின்றன. ஒத்தியைவுடன் ஓம்பப்படுகின்றன. ஆனால் இலங்கையில் மட்டும் அவ்வாறு இல்லை.

“இங்கு புத்தபிரானின் போதனைகளையும் அவரது பஞ்சசீலக் கொள்கைகளையும் கைவிட்ட சில பௌத்ததுறவிகள் அவர்களின் பின்நின்று இயக்கும் சில அரசியல்வாதிகளின் தயவுடன் இந்தநாட்டில் அமைதியின்மையையும், இனமுறுகலையும் தொடர வேண்டும் என நினைத்து வரும் சில ஏகாதிபத்தியவாதிகளின் தயவால் எதேச்சதிகாரம் பெற்று சட்டத்தையும், ஒழுங்கையும் கையிலெடுத்து தமிழர் பகுதிகளில் பல்வேறு எதேச்சதிகாரங்களைப் புரிந்து இலங்கையில் மதநல்லிணக்கம் என்பதை இல்லாதொழித்துள்ளார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி