'இறுதிப் போரில் சிக்குண்ட மக்களுக்கான மனிதாபிமான உதவிகள் தடுக்கப்பட்டன.
மருத்துவமனைகள் மீது விமானக் குண்டு வீச்சுத் தாக்குதல் இடம்பெற்றது என்பது உண்மை. எனினும், இது திட்டமிடப்பட்ட முறையில் பெருமளவில் இடம்பெறவில்லை' இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
அல்ஜசீராவுக்கான பேட்டியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
'2009ஆம் ஆண்டு முடிவுக்கு வந்த போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட்டுவிட்டதா?' என்று மெஹ்டி ஹசன் கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த ரணில் விக்கிரமசிங்க, எந்தச் சமூகத்துக்கும் இதுவரை நீதி வழங்கப்படவில்லை என்று குறிப்பிட்டார்.
'விமானப் படை விமானங்கள் மருத்துவமனைகள் மீது குண்டுவீசிய தருணங்கள் உள்ளன. இதற்காகச் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், இந்தத் தாக்குதல் பெருமளவில் இடம்பெற்றது என்று நான் சொல்ல மாட்டேன்' என்றும் ரணில் கூறினார்.
'ஐக்கிய நாடுகளின் குழு இலங்கைப் படையினர் போரில் சிக்குண்டவர்களுக்கான மனிதாபிமான உதவிகளைத் தடுத்தனர் என்று குறிப்பிட்டுள்ளனரே?' என்று மெஹ்டி ஹசன் கேள்வி எழுப்பினார்.
'நான் அது இடம்பெற்றது என நினைக்கின்றேன்' என்று அவ்வேளை எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ரணில் தெரிவித்தார்.
1980களின் பிற்பகுதியில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சராக பதவி வகித்த காலத்தில் பட்டலந்ததவில் சட்டவிரோதமாக தடுத்து வைத்தல், சித்திரவதைகள், கொலைகள் இடம்பெற்றன என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளையே அவர் நிராகரித்துள்ளார்.
அரசாங்க விசாரணை அறிக்கை பட்டலந்த வீடமைப்பு திட்டத்திற்கு பாதுகாப்பு வழங்கிய முக்கிய சூத்திரதாரி ரணில் விக்கிரமசிங்க என தெரிவித்திருந்ததுடன், அங்கு மீறல்கள் இடம்பெறுவது குறித்து குறைந்தபட்சம் அவருக்கு தெரிந்திருந்தது என குறிப்பிட்டுள்ளது.
அல்ஜசீரா செய்தியாளர் தன்வசம் வைத்திருந்த அரசாங்க விசாரணை அறிக்கையின் நகல்வடிவத்தை காண்பித்து கேள்விஎழுப்பியவேளை முதலில் அவ்வாறான அறிக்கையொன்று உள்ளதையே மறுத்த ரணில் விக்கிரமசிங்க பின்னர் அந்தஅ றிக்கை செல்லுபடித்தன்மை வாய்ந்ததா என கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை எனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் எவையும் நிரூபிக்கப்படவில்லை என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பில் தொடர்புடைய “பிற சக்திகளை” ஐ.எஸ்.ஐ.எஸ்-சார்புடைய அமைப்பால் நடத்தப்பட்டதாக கத்தோலிக்க திருச்சபையின் புதிய குற்றச்சாட்டுகள் குறித்தும் ஊடகவியலாளர் ஹசன் இதன்போது வினவினார்.
அதற்கு பதிலளித்த ரணில் விக்கிரமசிங்க, இந்தக் குற்றச்சாட்டுகளை “அனைத்தும் முட்டாள்தனம்” என்றும் “கத்தோலிக்க திருச்சபையின் அரசியலுக்கு” ஒரு எடுத்துக்காட்டு என்றும் கூறினார்.
இலங்கையில் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் முட்டாள்தனமாகப் பேசுகிறாரா?” என்று ஹசன் மறுபடியும் வினவினார்.
அதற்கு “ஆம்,” என ரணில் விக்கிரமசிங்க கூறினார்.
ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர், காலி முகத்திடலில் போராட்டக்காரர்களை கையாண்ட விதம் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து வந்த விமர்சனங்கள் குறித்து ரணில் விக்கிரமசிங்கேவிடம் இங்கு கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், ஐரோப்பிய ஒன்றியம் சில நிறுவனங்களுக்கு நிதியளித்து, எனது இராஜினாமாவைக் கோரியது, அதன் பின்னரே அதே ஒன்றியம் இலங்கையை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டெடுத்த மனிதராக என்னைப் பாராட்டியது” என்று கூறினார்.
மேலும் இறுதி யுத்தம் இடம்பெற்ற காலப்பதியில் பாதுகாப்பு தரப்பினரால் வைத்தியசாலைகள் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டமை உண்மையே என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.
ஆனால் இந்த தாக்குதல் திட்டமிட்டு மேற்கொள்ளப்படவில்லை. விமானப்படையின் சில உறுப்பினர்கள் வைத்தியசாலைகள் மீது தாக்குதல் நடத்தினர். அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் இவ்வாறான தாக்குதல்கள் பெருவாரியாக இடம்பெற்றதாக நான் கருதவில்லை என்று ரணில் கூறியுள்ளார். அதேநேரம் நாட்டில் எந்த சமூகத்துக்கும் இன்னும் நீதி வழங்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை தாம் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவையோ, ஏனைய ராஜபக்சக்களையோ பாதுகாக்க முற்படவில்லை எனவும் அவர் கூறினார்.
நாடு பொருளாதார நெருக்கடியிலிருந்த போது, தாம் அதனை மீட்க நடவடிக்கை எடுத்ததாகவும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
அதே நேரம் முன்னாள் இராணுவத்தளபதி சவேந்திர சில்வா, அந்த பதவிக்குப் பொருத்தமானவர் என்பதாலேயே அவரை இராணுவத்தளபதியாக நியமித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.