அனைத்து எரிபொருள் விநியோகஸ்தர்களும். விரைவில் எரிபொருள் கொள்வனவுக்கான
முற்பதிவுகளை மேற்கொள்ள வேண்டுமென்று அறிவிக்கப்பட்டுள்ளதாக எரிபொருள் விநியோகஸ்தர் சங்கத்தின் பிரதித் தலைவர் குசும் சந்தநாயக்க தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்துடனான கலந்துரையாடல்கள் மூலம் தற்போதைய பிரச்சினைக்கு தீர்வு காண எதிர்பார்ப்பதாகவும், நாளைய தினம் (04), பெற்றோலியக் கூட்டுத்தாபனத் தலைவருடன் கலந்துரையாடல் நடத்தப்படும் என்றும், அந்தக் கலந்துரையாடலுக்குப் பிறகு இது குறித்து தனது சங்க உறுப்பினர்களுக்குத் தெரிவிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் கூறினார்.
"அனைத்து விநியோகஸ்தர்களும், வழக்கம் போல் வழக்கமான வணிகத்தை மீண்டும் தொடங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஏனென்றால், நாங்கள் எடுத்த முடிவு நாட்டின் பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதை உணர்ந்தோம். யாரும் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாததால் தான், இது இவ்வளவு தூரம் சென்றுவிட்டது.
“இப்போது இதை ஒருதலைப்பட்சமாகச் செய்ய முடியாது என்றும், கலந்துரையாடல்கள் மூலம் சீர் செய்ய வேண்டும் என்றும் முடிவு செய்துள்ளோம். எனவே, நாளை காலை 9 மணிக்கு நடைபெறவுள்ள கூட்டத்தில் கலந்துகொள்ள வருமாறு, பெற்றோலியக் கூட்டுத்தாபனத் தலைவரும் எங்களைக் கேட்டுக் கொண்டதை நாங்கள் மதிக்கிறோம்.
"எனவே, அனைத்து விநியோகஸ்தர்களும் விரைவில் வணிகத்திற்குத் திரும்பவும், முன்பு போலவே அந்த விநியோக நடவடிக்கைகளைத் தொடரவும் வேண்டுமென்று நான் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.