இலங்கையில் பயிர் செய்கைகளுக்கு சேதம் விளைவிக்கும் வன விலங்குகளை கணிப்பிடும்
நடவடிக்கையை 5 நிமிடங்களில் நடத்த அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தை பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர்.
நாடு முழுவதும் காணப்படுகின்ற பயிர்களை, வன மிருகங்கள் கடுமையாக சேதப்படுத்தி வருவதாக கடந்த காலங்களில் கூறப்பட்டு வந்தன.
குறிப்பாக குரங்கு, யானை, மர அணில் உள்ளிட்ட பல்வேறு மிருகங்கள் வீட்டு தோட்டங்களில் செய்யப்படுகின்ற பயிர்களை சேதப்படுத்தியிருந்தன. இவ்வாறான பின்னணியில், வன மிருகங்களினால் பயிர்களுக்கு ஏற்படுகின்ற சேதங்களை தவிர்த்துக்கொள்ளுதல் உள்ளிட்ட சில விடயங்களை கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்த நிலையில், குரங்குகளை பிடித்து, சீனாவிற்கு அனுப்பி வைக்க கடந்த அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்திருந்த வேளையில், பல்வேறு தரப்பினரின் எதிர்ப்புக்கு மத்தியில் அந்த நடவடிக்கை கைவிடப்பட்டது.
எனினும், இந்த மிருகங்களினால் பயிர்களுக்கு தொடர்ச்சியாக சேதம் விளைவிக்கப்பட்டு வருகின்ற பின்னணியில், அதனை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மாறி மாறி வருகின்ற அரசாங்கங்கள் முன்னெடுத்து வருகின்றன.
இவ்வாறான பின்னணியில், நாடு முழுவதும் உள்ள பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் மிருகங்களை கணக்கெடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள கிராம சேவையாளர் பிரிவுகளில் இந்த நடவடிக்கை எதிர்வரும் 15ம் தேதி இடம்பெறும் என விவசாய மற்றும் மிருக வன பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
மக்கள் தமது வீட்டு தோட்டங்களிலுள்ள இவ்வாறான மிருகங்களை ஐந்தே நிமிடங்களில் கணக்கெடுத்து, உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்க வேண்டும் எனவும் அவர் கூறுகின்றார்.
''குரங்கு, மர அணில், மயில் போன்றவற்றை கணக்கெடுப்பதற்காக ஐந்து நிமிடங்கள் வழங்கப்படும். கிராம சேவையாளர் பிரிவுகளிலுள்ள அனைத்து அதிகாரிகளும் இந்த நடவடிக்கைகளில் தொடர்புப்படுவார்கள். ஐந்து நிமிடங்களுக்குள் தமது தோட்டத்தில் எத்தனை குரங்குகள் இருந்தன, எத்தனை மர அணில்கள் இருந்தன, எத்தனை மயில்கள் இருந்தன, வேறு மிருகங்கள் இருந்தனவா என்பதை தோட்ட உரிமையாளர்கள் கணிப்பிட வேண்டும். இதற்காக ஐந்து நிமிடங்கள் வழங்கப்படும்.
ஐந்து நிமிடங்களுக்கு வேறு தோட்டங்களுக்கு இந்த மிருகங்கள் பாய்ந்து செல்லக்கூடும். ஒரே மிருகத்தை மீள கணக்கெடுக்காதிருப்பதற்காகவே ஐந்து நிமிடங்களில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. அதனால் ஒரு திட்டம் தேவைப்படுகின்றது.'' என விவசாய மற்றும் மிருக வன பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
வன மிருகங்களினால் பயிர் நிலங்களுக்கு ஏற்படுகின்ற பாதிப்புக்கள் தொடர்பில் ஆராய்வதற்காக 15 பேரை கொண்ட நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக காணி மற்றும் நீர்பாசன பிரதி அமைச்சர் டொக்டர் சுனில் ரணசிங்க குறிப்பிடுகின்றார்.
''15 பேரை கொண்ட நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. வன மிருகங்களினால் ஏற்படுகின்ற சேதங்கள் எவ்வளவு, அதனால் ஏற்படுகின்ற பொருளாதார பாதிப்புக்கள் எவ்வளவு, வன மிருகங்களினால் ஏற்படுகின்ற பாதிப்புக்களை குறைத்துக்கொள்வது எவ்வாறு? போன்ற விடயங்களை இந்த நிபுணர் குழு ஆராயவுள்ளது. இந்த நிபுணர் குழுவின் ஆய்வுகளின் பின்னரே எமது எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம்'' என காணி மற்றும் நீர்பாசன பிரதி அமைச்சர் டொக்டர் சுனில் ரணசிங்க தெரிவிக்கின்றார்.
''கேலி கூத்தான விடயங்களை கூறுகின்ற அமைச்சர்களே தற்போதுள்ளனர். கேலி செய்வதை நிறுத்தி விட்டு மக்களின் தேவைகளுக்காக முன்னின்று செயற்படுமாறு கேட்டுக்கொள்கின்றோம்'' என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருணா தெரிவித்துள்ளார்.
பயிர் செய்கைகளுக்கு சேதம் விளைவிக்கும் மிருகங்களை ஐந்து நிமிடங்களில் கணக்கெடுக்கும் தீர்மானம் தொடர்பில் கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
''மிருகங்கள் வருகின்ற நேரங்களின் அடிப்படையில் இவ்வாறு ஐந்து நிமிடங்களில் முழுமையாக தீர்மானமொன்றை எடுக்க முடியுமா? முன்னேற்றமடைந்துள்ள இந்த உலகத்தில் நடைமுறை சாத்தியமற்ற செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளனர். இதனை செய்ய முடியாது.'' என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி தொலவத்த தெரிவிக்கின்றார்.
இதேவேளை, ஐந்து நிமிடங்களில் மிருகங்களை கணக்கெடுக்கும் நடவடிக்கைக்கு விவசாய அமைப்புக்களும் தமது எதிர்ப்புக்களை வெளியிட்டு வருகின்றன.
''வீட்டு தோட்டங்களிலுள்ள மிருகங்களை கணக்கெடுத்தால், காடுகளிலுள்ள மற்றும் வீதிகளிலுள்ள மிருகங்களை யார் கணக்கெடுப்பது. தோட்டமொன்றிலிருந்து அடுத்த நொடியே அடுத்த தோட்டத்திற்கு அந்த மிருகம் செல்லும் பட்சத்தில், அந்த மிருகத்தை அடுத்த வீட்டுகாரரும் கணக்கெடுத்தால் கணக்கெடுப்பு சரியாக அமையுமா? முறையாக இந்த கணக்கெடுப்பை முன்னெடுக்க முடியாது.'' என அநுராதபுர மாவட்ட நீர்பாச ஒன்றிணைந்த விவசாய அமைப்பின் தலைவர் புஞ்ஜிரால ரத்நாயக்க தெரிவிக்கின்றார்.
காடுகளை வளப்படுத்தும் திட்டமொன்றை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாக விவசாய மற்றும் மிருக வன பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
வன மிருகங்கள் தொடர்பான கணக்கெடுப்பு தொடர்பில் கருத்தை வெளியிட்ட சந்தர்ப்பத்திலேயே அவர் இந்த விடயத்தையும் வெளியிட்டிருந்தார்.
காடுகளில் வாழும் மிருகங்கள் காடுகளை விட்டு ஏன் வெளியேறுகின்றன என்ற பிரச்னைக்கு தீர்வை பெற்றுக் கொடுக்க வேண்டும் எனவும் அவர் கூறுகின்றார்.
காடுகளில் போதுமானளவு மிருகங்களுக்கு தேவையான உணவு வகைகள் மற்றும் நீர் இருக்கும் பட்சத்தில், மிருகங்கள் மக்கள் வாழும் பகுதிகளுக்குள் பிரவேசிக்காது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விடயங்களை கருத்திற் கொண்டு எதிர்காலத்தில் காடுகளை வளப்படுத்தும் திட்டமொன்றை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் விவசாய மற்றும் மிருக வன பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன கூறுகின்றார்.
சரியான திட்டத்திற்கு அமைவாகவே இந்த கணக்கெடுப்பு நடத்தப்படுவதாக விவசாய அமைச்சின் விவசாய அபிவிருத்தி மேலதிக செயலாளர் திஸ்னா ரத்னசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று ( மார்ச் 03) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
முதல் கட்டமாக குரங்கு, மந்தி, மர அணில் மற்றும் மயில் ஆகியவற்றை மட்டுமே இந்த கணக்கெடுப்பில் உள்வாங்கப்படுவதாகவும் அவர் கூறுகின்றார்.
இலங்கையில் இதற்கு முன்னர் இவ்வாறான கணக்கெடுப்பொன்று நடத்தப்படவில்லை என விவசாய அமைச்சின் விவசாய தொழில்நுட்ப பணிப்பாளர் தனுஜ ஹேமந்த அமரசிங்க தெரிவிக்கின்றார்.
''இந்த கணக்கெடுப்பை நடத்துவதற்காக பத்திரமொன்று வழங்கப்படும். மிகவும் இலகுவான பத்திரமாக காணப்படும். பெயர், விலாசம், தொலைபேசி இலக்கம் உள்ளிட்ட விடயங்கள் முதல் கட்டமாக நிரப்பப்பட வேண்டும். அதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட மிருகங்கள் எத்தனை இருந்தன என்பது தொடர்பான தகவல்களை இந்த பத்திரத்தில் நிரப்ப வேண்டும்.
காலை 8 மணி முதல் 8.05 வரையான நேரம் வரை தமது தோட்டத்தில் மாத்திரம் உள்ள மிருகங்களை இந்த பத்திரத்தில் குறிப்பிட வேண்டும். கிராம சேவையாளர்கள் 15ம் தேதிக்கு முன்னர் இந்த பத்திரத்தை தமது அதிகாரத்திற்குட்பட்ட பகுதிகளுக்கு வழங்குவார்கள். 15ம் தேதி இந்த நிரப்பிய பத்திரத்தை மீள கிராம சேவையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். அதனைத் தொடர்ந்து, பிரதேச, மாவட்ட, மாகாண மற்றும் தேசிய ரீதியான கணக்கெடுப்பை நாம் முன்னெடுப்போம். அவ்வாறே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.' என அவர் கூறுகின்றார்.
பொது இடங்களிலுள்ள மிருகங்களை கணக்கெடுப்பது தொடர்பில் கிராம சேவை உத்தியோகத்தர்கள் வேலைத்திட்டமொன்றை திட்டமிட வேண்டும் என விவசாய அமைச்சின் விவசாய தொழில்நுட்ப பணிப்பாளர் தனுஜ ஹேமந்த அமரசிங்க தெரிவிக்கின்றார்.
''பேரூந்து தரிப்பிடங்கள், கடைகள், பொது இடங்களிலுள்ள மிருகங்களை கணக்கெடுப்பதற்காக பொறுப்பான நபர் ஒருவர் ஈடுபடுத்தப்பட வேண்டும். மேலும் தேயிலை, இறப்பர் போன்ற தோட்டங்களிலுள்ள மிருகங்களை எவ்வாறு கணக்கெடுப்பது என்ற கேள்வி எழுகின்றது. அந்த தோட்டங்களிலுள்ள அதிகாரிகள் அல்லது பொறுப்பானர்களை அதற்காக ஈடுபடுத்த முடியும்" என அவர் குறிப்பிடுகின்றார்.
வீட்டுத் தோட்டங்களுக்குள் வருகைத் தரும் வன மிருகங்களை ஐந்து நிமிடங்களில் கணக்கெடுப்பது சாத்தியமான விடயமா என கேட்டபோது, முறையான திட்டமொன்றின்றி இவ்வாறு செயற்படுத்துகின்றமையானது நடைமுறை சாத்தியமற்ற விடயம் என சூழலியலாளரும், வழக்கறிஞருமான கலாநிதி ஜகத் குணவர்தன பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
''கணக்கெடுப்பொன்று நடத்தப்பட வேண்டும் என்றால், விஞ்ஞான ரீதியாக அந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும். அதற்கான விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டு, அந்த குழுவிற்கு பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும். அது உரிய முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும்.
ஒரே நேரத்தில் ஒரே மிருகத்தை இரண்டு தடவைகள் கணக்கெடுப்பதை தவிர்ப்பதற்கு பல்வேறு நடைமுறைகள் காணப்படுகின்றன. மக்களுக்கு ஊடகங்களில் அறிவித்து, ஐந்து நிமிடங்களில் கணக்கெடுப்பொன்றை நடத்த முடியாது. பயிற்சிகளை பெற்ற நிறுவனங்கள் இருக்கின்றன. அந்த நிறுவனங்களின் ஊடாகவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும். அவ்வாறு செய்யாத பட்சத்தில் அந்த நடவடிக்கை வெற்றியளிக்காது.'' என குறிப்பிட்டார் அவர்.
இதேவேளை, விஞ்ஞான ரீதியில் உரிய நடைமுறைகளை பின்பற்றியே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சு இன்று அறிவித்துள்ளது.
- பிபிசி