எண்பதுகளின் பிற்பகுதியில் இலங்கைக்கு வந்த இந்தியப் படைகளால் 35 வருடங்களுக்கு முன்னர்

மேற்கொள்ளப்பட்ட படுகொலையில் உயிர் பிழைத்தவர்களிடம் இருந்து தகவல்களை சேகரித்து, சர்வதேச மனித உரிமை சட்டத்தரணி தலைமையிலான அமைப்பினால் தயாரிக்கப்பட்ட புதிய அறிக்கை வடக்கில் வெளியிடப்பட்டுள்ளது.

படுகொலையில் ஈடுபட்ட இந்திய இராணுவ அதிகாரிகளைக் கண்டறிந்து, அவர்களை பொறுப்புக்கூறச் செய்து, பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்புக் கேட்டு இழப்பீடு வழங்குமாறு இந்திய அரசைக் கேட்டுக்கொள்வதாக தென்னாப்பிரிக்காவை தளமாகக் கொண்ட சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டத்தினால் (ITJP) இன்றைய தினம் (மார்ச் 2) யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் இலங்கையில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

“இறந்த சடலங்களின் துர்நாற்றமும், எரிந்த மணமும் கலைந்து போவதற்கு முன்னரே, உயிர்தப்பியவர்களிடமிருந்து வாக்குமூலங்களை கவனமாகப் பதிவுசெய்து, ஆவணப்படுத்திய தனியொருவரின் அசாதாரண செயற்பாடே இவ்வறிக்கை உருவாகுவதைச் சாத்தியமாகியது.” என "வல்வெட்டித்துறை: ஒரு படுகொலையின் வாக்குமூலங்கள்" என்ற தலைப்பிலான 62 பக்க அறிக்கை குறித்துசர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டத்தின் நிர்வாக பணிப்பாளர் ஜஸ்மின் சூகா தெரிவிக்கின்றார்.

“அநியாயங்கள் நடைபெறும்போதே அவற்றை ஆவணப்படுத்துவது எதிர்காலப் பொறுப்புக்கூறல் செயற்பாட்டுக்கு செய்யப்படும் முதலீடாகும் என்பதே இதிலிருந்து கற்றுக்கொண்ட பாடமாகும். மேலும், நீதி கிடைப்பதற்கான வாய்ப்புக் கிடைப்பதற்கு பல தசாப்தங்கள்கூட எடுக்கலாம், ஆனால், இழைக்கப்பட்ட மீறல்களும் துன்பங்களும் ஆவணப்படுத்தப்படாவிட்டால், இது சாத்தியமே இல்லை.” எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

1989 இல், பாடசாலை அதிபராகவும், விஞ்ஞான ஆசிரியராகவும் இருந்த வல்வெட்டித்துறையைச் சேர்ந்த நடராஜா ஆனந்தராஜ் என்பவர் இப்படுகொலை நிகழ்ந்தபோது தடுத்து வைக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, மயிரிழையில் உயிர்பிழைத்திருந்தார். சடலங்களை எரித்துவிட்டு, வெறும் ஒருசில நாட்களுக்குள்ளேயே பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து 200 வரையான சத்தியப் பிரமாணங்களைச் சேகரிக்க ஆரம்பித்திருந்தார்.

அதன் பின்னர் அவர் இந்தியாவிற்கு சென்று வல்வெட்டித்துறையில் நடந்ததை இந்திய அரசாங்கத்திடம் தெரிவித்ததோடு, 'வல்வைப் படுகொலை" என்னும் ஒரு புத்தகத்தையும் வெளியிட்டார். பல தசாப்தங்கள் நீடித்த போரில், அவரது வீடு இலங்கை இராணுவத்தினரால் தீக்கிரையாக்கப்பட்டதோடு, அவர் சேகரித்த சத்தியப் பிரமாணங்களில் பாதிக்கும் மேல் இதில் அழிவடைந்தன.

தற்போதைய அரசாங்கத்தின் பிரதான கட்சியான ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தலைமையிலான மக்கள் விடுதலை முன்னணி, 1990களின் இறுதியில் இலங்கையில் நடவடிக்கைகளை மேற்கொண்ட இந்திய அமைதி காக்கும் படைகளை 'குரங்குப் படையினர்' என விமர்சித்திருந்தது.

வல்வெட்டித்துறைப் படுகொலைகள் தொடர்பாக சுயாதீன விசாரணையை நிறுவவும், படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகளை உறுதிப்படுத்தவும் இலங்கையின் சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்றிட்டம் இலங்கை அரசைக் கேட்டுக்கொள்கிறது.

குறிப்பாக, இந்தியர்களால் இராணுவத் தளமாகப் பயன்படுத்தப்பட்ட உடுப்பிட்டி மகளிர் கல்லூரியிலும், வல்வெட்டித்துறையிலும் பத்து இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் புதைக்கப்பட்டதாக நம்பப்படும் புதைகுழியை இலங்கை அகழ வேண்டும் எனவும் அந்த செயற்திட்டம் பரிந்துரைத்துள்ளது.

“இலங்கையின் வல்வெட்டித்துறையில் 35 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த படுகொலைக்கு இந்தியா முழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளவேண்டும்” என்ற தலைப்பிலான முழுமையான ஊடக அறிக்கை பின்வருமாறு,

ஜொகன்னஸ்பர்க்: எண்பதுகளின் இறுதியில் இலங்கைக்கு அனுப்பப்பட்ட இந்திய அமைதி காக்கும் படையினரால் 35 ஆண்டுகளுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட படுகொலையில் உயர்தப்பியவர்களின் வாக்குமூலங்களைத் தொகுத்து ITJP அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

இப்படுகொலையில் ஈடுபட்ட இந்திய இராணுவ அதிகாரிகளை அடையாளம் கண்டு, அவர்களை இப்படுகொலைக்குப் பொறுப்புக்கூற வைக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்புக் கோருவதுடன் அவர்களிற்கு இழப்பீடுகள் வழங்க வேண்டும் என்றும் இந்திய அரசாங்கத்திடம் இவ்வறிக்கை கோரிக்கை விடுக்கின்றது.

'ஒரு படுகொலையின் வாக்குமூலங்கள்" என்னும் இந்த அறிக்கையானது 1989 ஓகஸ்டில் வல்வெட்டித்துறை மக்களை இலக்கு வைத்து, மூன்று நாட்கள், திட்டமிட்டு நடாத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் விபரிக்கின்றது. இப்படுகொலையில் ஐந்து சிறுவர்கள், ஒரு குழந்தை உட்பட 60இற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டார்கள்.

'இறந்த சடலங்களின் துர்நாற்றமும், எரிந்த மணமும் கலைந்து போவதற்கு முன்னரே,உயிர்தப்பியவர்களிடமிருந்து வாக்குமூலங்களை கவனமாகப் பதிவுசெய்து, ஆவணப்படுத்திய தனியொருவரின் அசாதாரண செயற்பாடே இவ்வறிக்கை உருவாகுவதைச் சாத்தியமாகியது.

அநியாயங்கள் நடைபெறும்போதே அவற்றை ஆவணப்படுத்துவது எதிர்காலப் பொறுப்புக்கூறல் செயற்பாட்டுக்கு செய்யப்படும் முதலீடாகும் என்பதே இதிலிருந்து கற்றுக்கொண்ட பாடமாகும். மேலும், நீதி கிடைப்பதற்கான வாய்ப்புக் கிடைப்பதற்கு பல தசாப்தங்கள்கூட எடுக்கலாம், ஆனால், இழைக்கப்பட்ட மீறல்களும் துன்பங்களும் ஆவணப்படுத்தப்படாவிட்டால், இது சாத்தியமே இல்லை" இவ்வாறு சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டத்தி;ன நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்தார்.

பாடசாலை ஆசிரியர்

1989 இல், பாடசாலை அதிபராகவும், விஞ்ஞான ஆசிரியராகவும் இருந்த வல்வெட்டித்துறையைச் சேர்ந்த நடராஜா ஆனந்தராஜ் என்பவர் இப்படுகொலை நிகழ்ந்தபோது தடுத்து வைக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, மயிரிழையில் உயிர்பிழைத்திருந்தார். சடலங்களை எரித்துவிட்டு, வெறும் ஒருசில நாட்களுக்குள்ளேயே பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து 200 வரையான சத்தியப் பிரமாணங்களைச் சேகரிக்கத் தொடங்கினார். பின்னர், அவர் டெல்லிக்குச் சென்று வல்வெட்டித்துறையில் நடந்ததை இந்திய அரசாங்கத்திடம் தெரிவித்தார்.

மேலும் 'வல்வைப் படுகொலை"1 என்னும் ஒரு புத்தகத்தையும் வெளியிட்டார். பல தசாப்தங்கள் நீடித்த போரில், அவரது வீடு இலங்கை இராணுவத்தினரால் பின்னர் தீக்கிரையாக்கப்பட்டது, அவர் சேகரித்த சத்தியப் பிரமாணங்களில் பாதிக்கும் மேல் இதில் அழிக்கப்பட்டன.

லண்டனில் நிகழ்ந்த ஒரு தற்செயலான கண்டுபிடிப்பே இச்சம்பவத்தை மீண்டும் கண்டறிந்துகொள்வதற்கு வழிவகுத்தது. தமிழ் தகவல் மையத்தின் காகித ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்கும் போதுதான் இக்கண்டுபிடிப்பு நிகழ்ந்தது. 'எண்பதுகளின் பிற்பகுதியில், பாதுகாத்து வைக்கப்படுவதற்காக விமானத்தபால்மூலம் இலண்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஆவணங்களை நான் வாசித்துக்கொண்டிருந்தபோதுதான் ஒரு கடிதம் எனது கவனத்தை ஈர்த்தது. இந்திய அமைதிப்படையைச் சேர்ந்த கப்டன் மேனன் என்பவர், 'தன்னிலை மறந்து செயற்பட்டதாகத் தோன்றினார்" எனக் குறிப்பிடப்பட்டிருந்த அக்கடிதத்தில், உள்;ர் பிரஜைகள் குழுவைச் சேர்ந்த 12 உறுப்பினர்கள் கையொப்பமிட்டிருந்தனர். அப்பெயரைப் பார்த்ததும், என் மனதில் பொறி தட்டியது. இணையத்தில் தேடிப்பார்த்தபோது, அவரைப்பற்றிய பல தகவல்கள் வெளிப்பட்டன.

அக்கடிதத்தில் கையெழுத்திட்டவர்களில் யாராவது இன்னும் உயிருடன் இருக்கிறார்களா என்று இலங்கையில் உள்ளவர்களிடம் கேட்டேன், ஆனால் பலன் ஏதும் கிடைக்கவில்லை. ஆனால் ஒரு நாள், லண்டனில் உள்ள இளம் தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்களிடம் வல்வெட்டித்துறையில் இருந்து யாராவது இருக்கிறார்களா என்று கேட்டேன், மேலும் அவர்களுக்கு அந்தக் கடிதத்தைக் காட்டினேன்.

உடனடியாவே அதிலிருந்தவர்களின் ஒருவர் வல்வெட்டித்துறையிலிருந்த தன் நண்பனின் தாத்தாவுடன் என்னைத் தொடர்புபடுத்திவிட்டார்" இவ்வாறு இலண்டனிலுள்ள சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டத்தி;ன இயக்குனர், பிரான்ஸிஸ் ஹரிசன் கூறினார்.

பிரமாணப்பத்திரங்கள்

நடராஜா ஆனந்தராஜ் சேகரித்து வைத்த பிரமாணப்பத்திரங்கள் மூன்று நாள் படுகொலையில் உயிர்பிழைத்தவர்களின் அனுபவப் பகிர்வினைப் பேணிப்பாதுகாக்கின்றன. வல்வெட்டித்துறை மக்கள் தங்கள் அன்புக்குரியவர்கள் தம்முன்னே இந்திய அமைதிப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்படுவதை எவ்வாறு கண்டார்கள் என்பதை இவை விபரிக்கின்றன.

காயமடைந்த பலர் உயிர் பிழைப்பதற்காக இரத்த வெள்ளங்களில் செத்தவர்களைப் போல பாசாங்கு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். ஒரு வயதான மீனவர், தன் பேரன்கள் இருவர் தனது வீட்டிற்குள் ஓடி வந்ததுபோது அவர்களை ஆரத்தழுவியதையும், ஆனால், அவர்களின் தாய் வீட்டிற்கு மார்பிலிருந்து இரத்தம் கொட்டியபடி ஓடிவந்து, தனது காலடியில் விழுந்து இறந்ததையும் விபரிக்கின்றார். அவள் சில ஆண்டுகளுக்கு முன்புதான் தமிழர்களுக்கு எதிரான வன்முறையில் தனது கணவனைப் பறிகொடுத்து, விதவையாகியிருந்தாள். மற்றொரு சம்பவத்தில், இந்திய சிப்பாய்கள் இரண்டு சகோதரர்களை அவர்களின் வீட்டிலிருந்து இழுத்து வெளியே கொண்டு வந்தனர், அவர்களின் வீடு தீக்கிரையாக்கப்பட்டது.

அவர்களின் மனைவிகள் அவர்களை கட்டிப் பிடித்துக் கொண்டிருக்கும் போது, அவர்கள் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டது. ஆனால் பெண்கள் மட்டுமே உயிர் பிழைத்தனர். அந்நேரத்தில் வெளிநாட்டில் வாழ்ந்த திரு. சிவகணேஷனின் வீட்டிற்குள் இந்தியப் படைகள் உள்நுழைந்தபோது, அங்கு தஞ்சம் புகுந்திருந்த பெண்கள் சிப்பாய்களின் கால்களில் விழுந்து, தங்களைச் சுட வேண்டாம் என்று கெஞ்சினர். ஆனால் படையினரோ அவர்களை உதைந்து தள்ளிவிட்டனர். 60 வயதுக்குட்பட்ட அனைத்து ஆண்களும் ஒரு மாட்டுத்தொட்டியின் அருகில் சோடி சோடியாக வரிசையாக நிறுத்தப்பட்டுச், சுடப்பட்டனர். அதே நேரத்தில், எட்டிப்பார்த்து அழுதவர்களையும் சுடப்போவதாக இந்தியப் படையினர் மிரட்டினர்.

திரு. சுப்ரமணியம் நில அளவை மேலாளராக இருந்து ஓய்வுபெற்றிருந்தார். அவரது வீட்டில் ஐம்பது வரையானவர்கள் அடைக்கலம் புகுந்திருந்தார்கள். வீட்டுக்குள் புகுந்த படைவீரர்கள் அவரை உடனடியாகச் சுட்டதுடன், இன்னொருவருடைய சட்டைப்பையிலிருந்த பணத்தையும் கொள்ளையடித்தார்கள். பின்னர், அங்கிருந்த பெண்களையும் குழந்தைகளையும் நோக்கிச் சுட்டார்கள்.

சீக்கியச் சிப்பாய் ஒருவன் காயமடைந்தவர்களின் இரத்தம் நிலத்தில் வழிந்து அவனது கால்களை வந்தடையும்வரை சுட்டுக்கொண்டிருந்தான். ரவைக்கூட்டை மாற்றி மீண்டும் சுடுவதற்குத் தயாரானபோது, அவனது சகா ஒருவனால் தடுத்து நிறுத்தப்பட்டான். பிறிதொரு சம்பவம் ஒன்றில், காயமடைந்தவர்களை சுட்டுக்கொல்லும்படி ஒரு படைவீரன் இன்னொருவனுக்கு உத்தரவிட்டபோது, அவர்கள் அனைவரும் இரத்தப்போக்கில் இருப்பதால், விரைவில் சாகத்தான் போகின்றார்கள் என்று பதில்கூறியதாக அச்சம்பவத்தில் உயிர்தப்பிய ஒருவர் நினைவுகூர்ந்தார்.

குறைந்தது 20 வரையானவர்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாக, அறிக்கைகள் தெரிவித்தன. இவர்களில் ஒருவரைத் தவிர மற்றையவர்கள் தங்களது அடையாளங்களை வெளிப்படுத்த விரும்பவில்லை. தனது வீட்டுக்குள் புகுந்த படைவீரர்கள், தனது குழந்தையை ஒரு மூலையில் இருக்கச்செய்து, தனது வாயை ஒரு படைவீரன் பொத்திப் பிடித்திருக்க இரண்டு சீக்கியப் படைவீரர்கள் தன்னை மாறி மாறிப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக வாக்குமூலம் வழங்கினார்.

இக்கொடுமையினை அக்குழந்தை பார்த்தபடி இருந்தது. நடந்த சம்பவத்தை வெளியில் சொன்னால், முழுக் குடும்பத்தையுமே கொன்றுவிடுவோம் என படைவீரர்கள் அப்பெண்ணை எச்சரித்துவிட்டுச் சென்றார்கள்.

ஒரு வீதியில் மட்டுமே இருபத்தி மூன்று வீடுகள் எரியூட்டப்பட்டன. இந்தியச் சிப்பாய்கள் சிரித்துக்கொண்டே மக்களின் வீடுகளை எரித்ததாக நேரில் கண்ட சாட்சிகள் விபரித்தார்கள். கடைகள், திரையரங்குகள், நூலகம், வாகனங்கள், உணவுக் கையிருப்புக்கள், பயிர்கள், மீன்பிடி உபகரணங்கள் என எல்லாவற்றையும் இந்தியப் படையினர் எரியூட்டி அழித்தார்கள். இந்தியப் படையின் ரோந்து அணி மீது நடாத்தப்பட்டதாக அவர்கள் விபரித்த பதுங்கித் தாக்குதலுக்குப் பழிவாங்கும் விதமாக ஒட்டுமொத்த சமூகத்திற்குமான கூட்டுத் தண்டனையாக இது நடாத்தப்பட்டது.

பொதுமக்களை வறுமைக்குள்ளாக்கி, வீடற்றவர்களாக்கி, காயப்படுத்தி, பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி, சித்திரவதை செய்து, துன்பங்களை ஏற்படுத்தி, கொலை செய்ததுடன் அந்த நகரத்தின் பொருளாதாரத்தைச் சீரளிக்கும் நோக்குடன் நன்கு திட்டமிட்டே இந்த அழிவுகள் மேற்கொள்ளப்பட்டதாகவே தோன்றுகின்றது. ஊரடங்கு அமுல்ப்படுத்தப்பட்டதனால், வல்வெட்டித்துறையில் சிக்குண்டிருந்தவர்கள் உடனடியாகவே பட்டியினியால் தவித்தார்கள்.

மூவாயிரம் வரையான மக்கள் தங்களது வீடுகளை விட்டு இடம்பெயர்ந்தார்கள். ஆயிரம் வரையான மக்கள் படகுகளில் தென்னந்தியாவுக்குத் தப்பிச்சென்றார்கள். அந்நகரில் வசித்தவர்களில் பாதிப்பேர் பயத்தில் அல்லது விரகத்தியில் அங்கிருந்து வெளியேறியதாக ஊடகவியலாளர் ஒருவர் வெளிப்படுத்தினார். இவர்களில் பலர் பிரித்தானியாவிலும் கனடாவிலும் தற்போது வசித்தாலும், ஆண்டுதோறும் இப்படுகொலையினை நினைவுகூருகின்றார்கள்.

உயிர் பிழைத்தவர்களால் விபரிக்கப்பட்டுள்ள கோரமான மீறல்களில் நீதிக்குப் புறம்பான கொலைகள், சித்திரவதை, கொடூரமான, அவமானகரமான மற்றும் மனிதாபிமானமற்ற நடத்தை, தன்னிச்சையான கைது மற்றும் வலிந்து காணாமல் போதல் போன்றவை அடங்கும். போராளிகளையும் பொதுமக்களையும் வேறுபடுத்திப் பார்ப்பதற்கு இந்தியப் படைகள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இலங்கையில் இந்தியப் படைகள் இருந்த 32 மாதங்களில் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட மற்றைய அட்டூழியங்களுடன் பார்க்கையில், இலங்கையிலுள்ள தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்டதும் பரந்துபட்டதுமான தாக்குதல்களின் ஒரு பகுதியாகவே இந்த வன்முறையும் இடம்பெற்றுள்ளதுடன், இவை எந்தவகையில் பார்த்தாலும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களாக அமையலாம்.

இப்படுகொலையினை இந்தியா ஒப்புக்கொள்வதுடன், படுகொலைக்கு எழுத்துமூலமான மன்னிப்புக்கோரி, படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகளும் மறுவாழ்வும் வழங்கவேண்டும் எனவும் இவ்வறிக்கை இந்திய அரசாங்கத்திற்குக் கோரிக்கை விடுத்துள்ளது.

வெளிப்படையான மன்னிப்புக்கோரலாக இருக்கவேண்டும். மேலும் இப்படுகொலை நடந்த நேரத்தில், கட்டளையிடும் நிலையில் இருந்த அதிகாரிகளின் பெயர்களை வெளிப்படுத்தவேண்டும் என்றும், இவ்வன்முறைகளில் ஈடுபட்டவர்களை, அதிலும் குறிப்பாக தற்போதும் இந்திய இராணுவத்தின் உயர் பதவிகளில் இருக்கும் அதிகாரிகளை, குற்றவியல் ரீதியா பொறுப்புக்குக்கூறலுக்கு உட்படுத்த வேண்டும் எனவும் இந்தியாவிடம் கோரிக்கை விடுக்கின்றது.

மேலும் இவர்கள்மீது தடைகளையும், பயண உள்நுழைவுத் தடைகளையும் சர்வதேச சமூகம் விதிக்கவேண்டும் என்றும் சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் கோரிக்கை விடுப்பதுடன், இதில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்ள நபர்கள் பற்றிய விபரங்களை ஐ.நா. மற்றும் இதர அரசாங்கங்களுக்கும் வழங்கியுள்ளது.

இந்த அறிக்கை இலங்கை அரசாங்கத்தை வல்வெட்டித்துறைப் படுகொலை தொடர்பில் சுயாதீன விசாரணையை மேற்கொள்ளவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதை உறுதிசெய்யவும் வேண்டுமென அழைப்பு விடுக்கின்றது. குறிப்பாக, இந்திய இராணுவ முகாமாகப் பயன்படுத்தப்பட்டு, பத்து இளைஞர்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படும் உடுப்பிட்டி பெண்கள் கல்லூரியில் இருப்பதாகச் சொல்லப்படும் புதைகுழியினை தோண்டுவதற்குரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றது.

'இது பல தசாப்தங்களாக இலங்கையில் நடந்த நூற்றுக்கணக்கான படுகொலைகளில் ஒன்றுதான் இது என்பது எங்களுக்குத் தெரியும், ஆனால் இது அந்த நேரத்தில் மிகவும் கவனமாக ஆவணப்படுத்தப்பட்டது, மேலும் உடல்களின் எச்சங்கள் தோண்டி எடுக்கப்பட்டால், அவற்றை அடையாளம் காண்பது சாத்தியமாகும் என்பதுடன் இது குடும்பங்களுக்கும் சமூகத்திற்கும் அவர்களது ஏக்கத்திற்கு ஒரு முற்றுப்புள்ளியை வைக்கும். வல்வெட்டித்துறை நிகழ்வானது, உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான ஒரு பரிசோதனையாக இருக்கவேண்டும்" என்று ஜஸ்மின் சூக்கா கூறினார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி