நாட்டில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தற்போதுள்ள எரிபொருள் இருப்பு நாளை காலை வரை
மாத்திரமே போதுமானதாக இருக்கும் என்ற விநியோகஸ்தர்களின் கூற்றை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் மறுத்துள்ளது.
அத்துடன் நாட்டில் மூன்று வாரங்களுக்கு போதுமான எரிபொருள் இருப்பு உள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாடு முழுவதும் இன்று 1,581 முன்பதிவுகளை பெற்றுள்ளோம். இன்று ஞாயிற்றுக்கிழமை என்ற போதிலும் எரிபொருள் விநியோகிக்கப்படுகிறது. எனவே எரிபொருள் பற்றாக்குறை நிலவாது. ஒகஸ்ட் மாதம் இறுதி வரை எரிபொருளுக்கான முன்பதிவுகளை செய்துள்ளோம்.
நாட்டில் எரிபொருளுக்கு பற்றாக்குறை நிலவ வேண்டுமானால் அதன் இருப்பு முடிய வேண்டும் அல்லது எரிபொருளை முன்பதிவு செய்வதற்கான நிதி பிரச்சினை இருக்க வேண்டும். இந்த சிக்கல்கள் எதுவும் தற்போது இல்லை என அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை,
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையால் மீண்டும் எரிபொருள் நிலையங்களில் வாகனங்கள் வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். எனினும், அனைத்து எரிபொருள் நிலையங்களுக்கும் தேவையான எரிபொருள், தொடர்ச்சியாக எவ்வித தடையும் இன்றி விநியோகிக்கப்படுகிறது. எரிபொருள் நிலையத்தில் உரிமையாளர்களே திட்டமிட்டு இவ்வாறானதொரு நிலையை உருவாக்கியுள்ளனர் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார்.
“நாட்டில் எரிபொருளுக்கு தட்டுபாடு ஏற்பட்டுள்ளமையால் மீண்டு எரிபொருள் நிலையங்களில் வாகனங்கள் வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். எனினும், அனைத்து எரிபொருள் நிலையங்களுக்கு தேவையான தொடர்ச்சியாக எவ்வித தடையும் இன்றி விநியோகிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், மாத இறுதியில் எரிபொருள் விலை அதிகரிக்கலாம் என்பதற்காக ஒரு சில எரிபொருள் நிலையங்களில் வரிசைகள் உருவாகியுள்ளன.
“ஊடகங்கள் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாட்டில் எரிபொருளுக்கு பற்றாக்குறை நிலவி வருவதாக பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றனர். சில பகுதிகளில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டமைத் தொடர்பில் தெரியவந்ததை அடுத்து விரைந்து அப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது.
“எனினும், தற்போது எவ்வித சிக்கலும் இல்லை. அவசியமான எரிபொருள் எம்மிடம் உள்ளது. கடந்த அரசாங்கங்களில் அமைச்சுப் பதவியை வகித்தவர்கள் மற்றும் அவர்ளுடன் தொடர்புடையோருக்கு சொந்தமாக பல எரிபொருள் நிலையங்கள் உள்ளன. அதை இந்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். எரிபொருள் நிலையத்தின் உரிமையாளர்கள் திட்டமிட்டு இவ்வாறானதொரு நிலையை உருவாக்கியுள்ளனர். எரிபொருள் கூட்டுத்தாபனத்துடன் இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாட உள்ளோம்.
“எரிபொருள் கூட்டுத்தாபனம் பொதுமக்களுக்கான சேவையை வழங்கும் நிறுவனமாகும். மக்களின் பெரும்பான்மை ஆனையை பொறுப்பேற்று அரசாங்கம் செயல்படுகிறது. ஏனைய சிறு குழுக்களின் செயல்களைக் கண்டு அச்சம் கொள்ளத் தேவையில்லை” என்றார்.