ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் வேண்டுகோளின் பேரில், ஏப்ரல் 18ஆம் திகதி

முதல் 27ஆம் திகதி வரை பொதுமக்களுக்கான விசேட தலதா கண்காட்சியொன்றை   நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, ஏப்ரல் 18ஆம் திகதி பிற்பகல் 3:00 மணி முதல் மாலை 5:30 மணி வரையிலும், 19ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை நண்பகல் 12:00 மணி முதல் மாலை 5:30 மணி வரையிலும் தலதா  கண்காட்சி நடைபெற உள்ளது.

இது தொடர்பான  பூர்வாங்கக் கலந்துரையாடல் இன்று (02) கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது.

16 வருடங்களுக்குப் பிறகு நாட்டின் பௌத்த மக்களுக்கு இந்த வாய்ப்பை வழங்கிய மகாநாயக்க தேரர்களுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி, தங்கள் வாழ்வில் எப்போதாவது ஒரு  நாள் தலதா மாளிகையை வழிபட வேண்டும் என்பது  இந்த நாட்டின் பௌத்த மக்களின் எதிர்பார்ப்பாகும் என்று தெரிவித்தார்.

நாட்டில் இழந்து வரும் நாகரிகத்தை மீட்டெடுக்கவும், மத மற்றும் கலாச்சார மறுமலர்ச்சியை உருவாக்கவும் இந்த வாய்ப்பு உதவும் என்று எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி நம்பிக்கை தெரிவித்தார்.

நாட்டில் பௌத்த மறுமலர்ச்சியை உருவாக்க இந்த நடவடிக்கைகளை  ஏற்பாடு செய்வதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, புத்தாண்டின் நீட்சியாக நடைபெறும் தலதா  கண்காட்சி நாட்டை புதிய திசையில் இட்டுச் செல்லும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

பத்து நாட்கள் நடைபெறும் தலதா கண்காட்சியில்  இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பார்கள் என்று நம்பிக்கை தெரிவித்த ஜனாதிபதி, எந்தவித தடைகளும் அல்லது இடையூறுகளும் இல்லாமல் தலதா ஆண்டகையை வழிபடும் வாய்ப்பை அவர்களுக்கு வழங்குவது அனைவரின் பொறுப்பு என்றும், இதற்காக அரசாங்கம்  உச்ச பங்களிப்பையும் தலையீட்டையும் வழங்கும் என்றும் தெரிவித்தார்.

முக்கியமாக மூன்று வரிசைகளின் ஊடாக வரும் பொதுமக்களுக்கு, தலதா மாளிகையை வழிபடும் வாய்ப்பை வழங்குவது குறித்து  இதன் போது கலந்துரையாடப்பட்டது.

தலதா மாளிகை மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு தொடர்பாக மகாநாயக்க தேரர்கள் வழங்கும் அறிவுறுத்தல்களின்படி செயல்படுமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.

தலதா கண்காட்சி நடைபெறும் காலகட்டத்தில் கண்டி பகுதியில்  பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கவும், மாணவர்களின் கல்விக்காக  வேறு நாட்களில்  பாடசாலைகளை நடத்தவும்  பரிந்துரை செய்யப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலின் போது, ​​தலதா மாளிகையை வழிபட வரும் பக்தர்களின் சுகாதார வசதிகள் மற்றும் கழிவு  முகாமைத்துவம் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டதோடு அந்தக் காலகட்டத்தில் போக்குவரத்துத் திட்டத்தை செயல்படுத்தவும் திட்டங்கள் வகுக்கப்பட்டன.

மக்களின் சுகாதாரம், குடிநீர் தேவைகள் மற்றும் ஏனைய வசதிகளை வழங்குவது குறித்து நீண்ட கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன. தலதா மாளிகையை வணங்க வரும் பக்தர்களுக்கு உணவு வழங்குவதற்காக தானசாலைகள் நடத்த விரும்புவோர் பதிவு செய்வதற்கான வாய்ப்பு வழங்குவது குறித்தும் இதன் போது ஆராயப்பட்டது.

மக்களிடையே பௌத்த ஆர்வத்தை உருவாக்கும் வகையில் அலங்காரங்களை மேற்கொள்வதன் முக்கியத்துவம் மற்றும்  விசேட தலதா  நிகழ்வு குறித்து பொதுமக்களை தெளிவுபடுத்துவது  குறித்தும் ஆராயப்பட்டது.

மல்வத்தை மற்றும் அஸ்கிரிய அனுநாயக்க தேரர்கள் தலைமையிலான மகா சங்கத்தினர், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி, விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த, பாராளுமன்ற உறுப்பினர்கள் , மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் எஸ்.பி.எஸ். அபயகோன், ஜனாதிபதியின் செயலாளர்  கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேல, மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் நிறுவனங்களின்  பிரதானிகள், முப்படைகள் மற்றும்  பொலிஸை பிரதிநிதித்துவப்படுத்தி சிரேஷ்டஅதிகாரிகள் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி