கடந்த 2008ஆம் ஆண்டு ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்டமை தொடர்பில்
நேற்றைய தினம் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட இலங்கை இராணுவத்தின் முன்னாள் புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் இருவருக்கு கல்கிஸை நீதவான் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நவகத்தேகம மற்றும் உலுக்குளம் பகுதிகளைச் சேர்ந்த 42 மற்றும் 46 வயதுடைய இராணுவ புலனாய்வு பிரிவில் கடமையாற்றிய ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பத்திரிகையொன்றின் ஆசிரியராக பணியாற்றி வந்த ஊடகவியலாளர் கீத் நொயார், கடந்த 2008 மே மாதம் கடத்தப்பட்டு தாக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக இராணுவ வீரர்கள் உட்பட சந்தேக நபர்கள் சிலர் முன்னர் கைது செய்யப்பட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.