ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் உறுப்பினராகக் கூறப்படும் சஞ்சீவ குமார சமரரத்ன
எனப்படும் கணேமுல்லே சஞ்சீவவின் கொலையின் முக்கிய சந்தேக நபராகக் கருதப்படும் இஷாரா செவ்வந்தி இன்னும் நாட்டில் இருப்பதாக, பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இன்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான புத்திக மனதுங்க இதனைத் தெரிவித்தார்.
மேற்படி குற்றவாளியான இஷாரா செவ்வந்தி, நாட்டை விட்டு வெளியேறக்கூடும் என்று கருதப்படும் ஒவ்வொரு இடத்திலும் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
கணேமுல்ல சஞ்சீவ, கடந்த 19ஆம் திகதியன்று புதுக்கடை எண் 05 நீதவான் நீதிமன்றத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். பிரதான சந்தேகநபருக்கு, நீர்கொழும்பு - கட்டுவெல்லேகமவில் வசிக்கும் 25 வயதுடைய இஷாரா செவ்வந்தி என்ற பெண்ணே துப்பாக்கியை வழங்கியுள்ளார் என்று அடையாளம் காணப்பட்டார்.
குற்றச் செயலில் ஈடுபட்ட பிறகு அப்பெண் காணாமல் போனார். இப்போது அவரைக் கைது செய்ய பொலிஸார், பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். இருப்பினும், இன்று காலை அவரது தாயாரும் தம்பியும் கொழும்பு குற்றப்பிரிவால் கைது செய்யப்பட்டனர்.
48 மற்றும் 23 வயதுடைய இருவரும் நீர்கொழும்பு, கட்டுவெல்லேகம பகுதியைச் சேர்ந்தவர்கள்.
ஒரு கொலை குறித்து தெரிந்திருந்தும், அது குறித்த தகவலை மறைத்து, குற்றத்திற்கு உதவியதாக இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், இதுவரை 10 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.