நாட்டின் பல மாவட்டங்களில் காணப்படும் அதிக வெப்பநிலை குறித்து பொது மக்கள் அவதானம்
செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக, இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
வடக்கு, வடமத்தி, வடமேல், மேற்கு, சபரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் நிலவும் வெப்பம் மனித உடலுக்கு உணரப்படும் வெப்பநிலை தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால், போதிய நீர் ஆகாரங்களை அருந்து மாறும் ஓய்வு எடுக்கும் போது நிழலான இடங்களில் இருக்குமாறும் திணைக்களம் தமது அறிவித்தலில் தெரிவித்துள்ளது.
அவ்வாறே வயோதிபர்கள் மற்றும் நோய்களால் பாதிக்கப்பட்ட நபர்கள் இது தொடர்பாக விசேட கவனத்துடன் செயற்படுமாறும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வெள்ளை அல்லது இள நிறங்களில் மற்றும் இலகுவான ஆடைகளை அணிந்து கொள்ளுமாறும் கனரக வேலைகளில் ஈடுபடுவதில் இருந்து முடிந்தவரை கட்டுப்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ளுமாறும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இரவு நேரங்களில் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு (சுமார் (30-40) வேகத்தில் மிதமான பலத்த காற்று வீசக்கூடும்.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் நிறைந்து காணப்படும்
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிக பலத்த காற்று வீசக்கூடும். பொதுமக்கள் மின்னல் தாக்கங்களால் ஏற்படும் அபாயங்களைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.