சுட்டுக் கொல்லப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டுவரும் குழுவின் தலைவரான
சஞ்சீவவின் மரணம் குறித்து விசாரணை நடத்துமாறு, கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி, நீதித்துறை மருத்துவ அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, கொழும்பு தேசிய மருத்துவமனையின் பிணவறையில் தற்போது பிரேத பரிசோதனை நடைபெற்ற பின்னர், அவரது உடலை அடக்கம் செய்ய, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரேத பரிசோதனைக்குப் பிறகு, சடலம் அவரது தாயாரிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.
முன்னதாக, துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கனேமுல்ல சஞ்சீவவின் சடலத்தைப் பெற்றுக்கொள்வதற்கு, அவருடைய மூத்த சகோதரி வந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.
நேற்று (19) காலை புதுக்கடை நீதிமன்ற வளாகத்தின் 5ஆம் இலக்க நீதவான் நீதிமன்ற அறைக்குள் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டுவரும் குழுவின் தலைவரான கனேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்டார்.
பூஸா உயர் பாதுகாப்பு சிறைச்சாலையிலிருந்து விசேட பாதுகாப்பின் கீழ் நேற்று புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டபோதே அவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார்.
பாதாள உலகக் குழுவின் தலைவர் எனக் கூறப்படும் கனேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பாக நேற்று (19) கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் பெயராக மொஹமட் அசாம் ஷெரிப்தீன் என்று பெயரை அறிவித்ததன் ஊடாக தங்களுக்கு பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாகக் கூறி, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஒரு சீராக்கல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவை மொஹமட் அசாம் ஷெரிப்தீனின் சகோதரர் தாக்கல் செய்துள்ளார்.
இந்த சீராக்கல் மனு தொடர்பாக நீதிமன்றத்தில் சாட்சியங்களை முன்வைத்த சட்டத்தரணி தசுன் பெரேரா, கனேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மொஹமட் அசாம் ஷெரிப்தீன் அல்ல என்று குறிப்பிட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேகநபரும் மொஹமட் அசாம் ஷெரிப்தீனும் ஒருவர் அல்ல, இரண்டு நபர்கள் என்றும் அவர் கூறினார்.
இதனால் மொஹமட் அசாம் ஷெரிப்தீனின் குடும்பத்தினர் ஏராளமான சட்ட மற்றும் சமூகப் பிரச்சினைகளைச் சந்திக்க நேரிட்டுள்ளதாகக் கூறி, இது தொடர்பாக தகுந்த உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும் என்று சட்டத்தரணி கோரிக்கை விடுத்தார்.
முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரிசீலித்த தலைமை நீதவான் தனுஜா லக்மாலி, இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் இன்னும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படாத நிலையில், அவரை ஆஜர்ப்படுத்தியதன் பின்னர் கோரிக்கையை சமர்ப்பிக்குமாறு சட்டத்தரணிக்கு அறிவித்தார்.
இதேவேளை, கனேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிவரும் பொலிஸ் அதிகாரி ஒருவர் கொழும்பு குற்றவியல் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பு தலைமையக பொலிஸ் நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ள குற்றவியல் பிரிவில் நீதிமன்றப் பணிகள் பிரிவில் கடமையாற்றிவந்த சந்தேகநபர், பாதெனிய பகுதியைச் சேர்ந்த 25 வயதுடையவர் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கனேமுல்ல சஞ்சீவ துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தற்போது தலைமறைவாகியுள்ள சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி வீரசிங்கவுடன் அவர் தொலைபேசி உரையாடலில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களை விசாரணை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
முதற்கட்ட வாக்குமூலங்களைப் பதிவு செய்த பின்னர், கைது செய்யப்பட்ட அதிகாரி மேலதிக விசாரணைக்காக கொழும்பு குற்றவியல் பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.