ஜனவரி 27ஆம் திகதி குற்றப்புலனாய்வுத் துறைக்கு சட்ட மா அதிபரால் அனுப்பப்பட்ட
கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சந்தேகநபர்கள், ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் அல்ல என்று சட்ட மா அதிபர் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
லசந்த விக்ரமதுங்க ஓட்டிச் சென்ற வாகனத்திலிருந்து ஒரு ஆவணம் காணாமல் போனது தொடர்பாக குற்றப்புலனாய்வுத் துறை நடத்திய விசாரணையின் போது கைது செய்யப்பட்ட திஸ்ஸசிறி சுகதபால மற்றும் சிறிமேவன் பிரசன்ன நாணயக்கார ஆகியோருக்கு எதிராகக் குற்றவியல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய போதுமான ஆதாரங்கள் இல்லாததால், அவர்களை விடுவிக்க முடிவு செய்துள்ளதாகவும் சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
புதிய ஆதாரங்களை வெளியிடுவதன் அடிப்படையில் குற்றவியல் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்வதைப் பரிசீலிப்பதை இந்த வெளியீடு தடுக்காது என்றும் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பான விசாரணைகள் இன்னும் நிறைவடையவில்லை என்றும், அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த அறிவித்தலில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாவது,
“லசந்த விக்ரமதுங்க, கடந்த 2009ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார். லசந்த படுகொலைச் சம்பவம் தொடர்பான வழக்கில் இதுவரை சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.
“சம்பவம் நடந்து ஆறு வருடங்களின் பின்னர், 2015ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் லசந்தவின் சாரதியைக் கடத்திச் சென்ற குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் இராணுவ சார்ஜண்ட் மேஜர் பிரேமானந்த் உதலாகம கைது செய்யப்பட்டிருந்தார்.
“ஆனால், சாரதி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் அதற்கு முன்னதாக எதுவித முறைப்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. அத்துடன் அவரை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் ஏற்பட்ட சட்டச் சிக்கல்களை கருத்திற்கொண்டு, அவரை வழக்கில் இருந்து விடுவிக்க தீர்மானிக்கப்பட்டது.
“அதேபோன்று, சாட்சியங்களை அழித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரிகளான திஸ்ஸசிறி சுகதபால மற்றும் பிரசன்ன நாணயக்கார ஆகியோருக்கு எதிராக போதுமான சாட்சியங்கள் இல்லாத நிலையில் அவர்களையும் விடுதலை செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது” என்றும் சட்ட மா அதிபர் திணைக்களம் விளக்கம் அளித்துள்ளது.