2024ஆம் ஆண்டின் 36ஆம் இலக்க மின்சார சட்டத்தை உடனடியாக செயலிழக்கச் செய்து நுகர்வோர்

உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டு எதிர்க்கட்சித் தலைவர் இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கை பின்வருமாறு,

2024ஆம் ஆண்டின் 36ஆம் இலக்க மின்சார சட்டத்தை உடனடியாக செயலிழக்கச் செய்து நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும்.

2002ஆம் ஆண்டின் 35ஆம் இலக்க இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு சட்டத்தின் கீழ் இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு நிறுவப்பட்டது. இது நாட்டின் மின்சார துறை, பெற்றோலிய துறை மற்றும் நீர்ச் சேவை துறையை ஒழுங்குபடுத்துவதற்காக ஆகும்.

பின்னர் 2009ஆம் ஆண்டின் 20ஆம் இலக்க இலங்கை மின்சார சட்டம் அமுலுக்கு வந்த பின்னர், மின்சாரத் துறையை ஒழுங்குபடுத்துவதற்கான அதிகாரங்கள் இந்த ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டன.

மின்சாரத் துறையின் பொருளாதார, தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்பு ஒழுங்குபடுத்தல் நடவடிக்கைகள் அன்றிலிருந்து ஆணைக்குழுவால் மேற்கொள்ளப்பட்டன.

எவ்வாறாயினும், 2009ஆம் ஆண்டின் 20ஆம் இலக்க இலங்கை மின்சார சட்டம் மற்றும் 2002ஆம் ஆண்டின் 35ஆம் இலக்க இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு சட்டம் ஆகியவற்றின் ஏற்பாடுகளின் கீழ் செயல்படும் பொறிமுறையின் கீழ், கொள்கை வகுத்தல் பணி அமைச்சுக்கும், ஒழுங்குபடுத்தல் பணி இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிற்கும், உரிமம் பெற்றவர்களின் பொறுப்புகள் இலங்கை மின்சார சபை உள்ளிட்ட உரிமம் பெற்றவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.

எனினும், 2024 ஜூன் 27ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட 2024ஆம் ஆண்டின் 36ஆம் இலக்க இலங்கை மின்சாரத் துறை சட்டமானது, இதுவரை தெளிவாக செயல்பட்டு வந்த கொள்கை வகுத்தல் பணிகள், ஒழுங்குபடுத்தல் பணிகள் மற்றும் உரிமம் பெற்றவர்களின் பணிகளை குழப்பமான முறையில் சிக்கலாக்கி, மின்சார துறையின் ஒழுங்குபடுத்தலில் இதுவரை இருந்த தெளிவான செயல்முறையை சிக்கலான நிலைக்கு தள்ளும் சட்ட கட்டமைப்பை உருவாக்கியுள்ளது.

இதற்கிடையில், 2024 ஜூன் 27ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட இந்த புதிய சட்டம் 2025 ஜூன் மாதத்தில் முழுமையாக நடைமுறைக்கு வரவுள்ளது.

இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தால், தற்போது நடைமுறையில் உள்ள 2009ஆம் ஆண்டின் 20ஆம் இலக்க இலங்கை மின்சார சட்டத்தில் உள்ள துறையின் முன்னேற்றத்திற்கு மிக அவசியமான அம்சங்கள் நீக்கப்படும்.

1. நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் உரிமைகளுக்கான ஏற்கனவே இருந்த ஏற்பாடுகளை நீக்குதல்.

2. தொடர்ச்சியான மின் விநியோகத்திற்கான ஏற்பாடுகளை நீக்குதல்.

3. அனைத்து தரப்பினரின் கருத்துக்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட குறைந்த செலவு உற்பத்தித் திட்டம் இந்த வரைவின் மூலம் நீக்கப்படும், அதன்படி உற்பத்தித் திட்டத்தை அங்கீகரிக்கும் அதிகாரம் அமைச்சுக்கு வழங்கப்படும்.

4. புதுப்பிக்கத்தக்க மின் நிலையங்களிலிருந்து மின்சாரம் கொள்வனவு செய்யும் கட்டணத்தை தீர்மானிக்கும் அதிகாரமும் அமைச்சுக்கு வழங்கப்படும்.

5. மக்கள் கருத்துக்களின் அடிப்படையில் நியாயமான செலவின் அடிப்படையில் மின் கட்டணத்தை தீர்மானிப்பதற்கு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிற்கு இருந்த அதிகாரங்கள் அமைச்சருக்கும் அவரால் நியமிக்கப்படும் குழுவிற்கும் மாற்றப்படும்.

சமீபத்தில் தற்போதைய மின்வலு அமைச்சர் பாராளுமன்றத்தில் மின் கட்டணங்களை 37% உயர்த்த வேண்டும் என கூறினாலும், பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு நாட்டின் மின் நுகர்வோருக்கு 20% கட்டணக் குறைப்பை மேற்கொண்டது 2009ஆம் ஆண்டு சட்டத்தின் மூலம் கிடைத்த அதிகாரங்களின் காரணமாகும்.

எனினும், எதிர்காலத்தில் 2024ஆம் ஆண்டின் 36ஆம் இலக்க சட்டம் நடைமுறைக்கு வந்த பின்னர், இலங்கை மின்சார சபை மற்றும் மின்சார அமைச்சின் அதிகாரிகளின் விருப்பப்படி மின் கட்டணங்கள் தீர்மானிக்கப்படும், இதன் மூலம் மின் நுகர்வோரை சுரண்டும் முறைமை உருவாகும்.

தற்போதைய அரசாங்கத்தின் 'வளமான நாடு - அழகான வாழ்க்கை' கொள்கை அறிக்கையில் உள்ள வாக்குறுதிகளை இந்த தருணத்தில் நினைவுபடுத்துவது முக்கியம்.

மேற்கோள்: பக்கம் 167

"மின் கட்டண முறைமை, பெற்றோலியம், எரிவாயு விலை சூத்திரம் மற்றும் விலை திருத்த செயல்முறையை மிகவும் நியாயமான மற்றும் வெளிப்படையான முறைக்கு இற்றைவரைப்படுத்தல்"

மேலும், தேசிய மக்கள் சக்தி 2024.08.15 அன்று வெளியிட்ட அவர்களின் 'தேசிய வலுசக்தி கொள்கை கட்டமைப்பில்' பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கோள்:

"சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட மின்சார சட்டம் போதுமான பங்குதாரர் பங்களிப்புடன் செய்யப்படவில்லை. இந்த அழிவுகரமான சட்டத்தை மிகவும் முற்போக்கான சட்டமாக மாற்ற பல்வேறு தரப்பினர் முயற்சித்த போதிலும், தற்போதைய அரசாங்கம் இந்த சட்டத்தை ரகசியமாக வரைவு செய்தது. முறையான பொது ஆலோசனையுடன் மின்சார துறைக்கான புதிய சட்டத்தை உருவாக்க நடவடிக்கை எடுப்போம்"

எனவே, அவர்களே குற்றம் சாட்டிய இந்த அழிவுகரமான சட்டத்தை நடைமுறைப்படுத்த தற்போதைய திசைகாட்டி அரசாங்கத்திற்கு நெறிமுறை உரிமை இல்லை.

அதன்படி, 2024 ஜூன் 27 மின்சார சட்டத்தை ரத்து செய்வதற்கும், மின்சார துறைக்கான புதிய முற்போக்கான சட்டத்தை உருவாக்கி நடைமுறைப்படுத்துவதற்கும், மேலும் அரசாங்கம் வாக்குறுதியளித்தபடி பெற்றோலிய துறையை ஒழுங்குபடுத்த இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிற்கு அதிகாரம் வழங்கும் புதிய துறை சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் எதிர்க்கட்சியாக நாம் அரசாங்கத்தை தொடர்ந்து வலியுறுத்துகிறோம்.

இதன் மூலம் மின் பாவனையாளர்களின் உரிமையையும், மின்சார துறையின் சுதந்திரத்தையும் உறுதிப்படுத்துமாறு நாம் அரசாங்கத்திற்கு வலியுறுத்துகிறோம்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி