நாட்டில் இடம்பெற்ற பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாகத் தேடப்பட்டு
வந்த மூன்று சந்தேகநபர்கள், நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
டுபாயில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களையும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று இந்நாட்டுக்கு அழைத்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இலங்கை பொலிஸினால் மேற்கொள்ளப்பட்ட அறிவித்தலின் அடிப்படையில், சர்வதேச பொலிஸார் குறித்த சந்தேக நபர்களுக்கு சிவப்பு அறிக்கையை வௌியிட்டிருந்தனர்.
குறித்த மூன்று சந்தேகநபர்களும் இன்று காலை UL-226 ரக விமானத்தில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர் என்று, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட சந்தேகநபர்கள் செய்ததாகக் கூறப்படும் குற்றங்கள் குறித்த விவரங்களையும் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது.
ரன்முனி மகேஷ் ஹேமந்த சில்வா
42 வயது
முகவரி - புவக்கஹா தோட்டம், மாகந்த, உரகஸ்மங்ஹந்திய.
பெலியத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெலியத்த - வலஸ்முல்ல வீதியில் உள்ள கஹவத்த பகுதியில், 22.01.2024 அன்று டிஃபென்டர் வாகனத்தில் பயணித்த ஐந்து பேர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி படுகொலை செய்த குற்றத்துக்காக, தங்காலை நீதவான் நீதிமன்றத்தால் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சந்தன என்று அழைக்கப்படும் கந்தகம, தெனியே கெதர பிரதீப் சந்தருவன்,
40 வயது
முகவரி - ஸ்ரீ ஆனந்தராம மாவத்தை, கொலன்னாவ.
வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவில் 18.06.2023 அன்று துப்பாக்கியால் சுட்டு ஒருவரை கொலை செய்ய முயன்ற வழக்கில் தேடப்படும் சந்தேகநபருக்கு, அளுத்கடை எண் 02 நீதவான் நீதிமன்றத்தால் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
02.01.31 வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவில் துப்பாக்கியால் சுட்டு ஒருவரை காயப்படுத்தி கொலை முயற்சி.
2021.06.30 வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவில் துப்பாக்கியால் சுடப்பட்டு ஒருவர் கொல்லப்பட்டார்.
2023.06.05 வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவில் துப்பாக்கியால் சுட்டு கொலை முயற்சி.
2023.06.05 வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவில் துப்பாக்கியால் சுட்டு கொலை முயற்சி.
2023.02.15 வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவில் ஒருவர் மீது தாக்குதல் மற்றும் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல்.
ரொட்டும்ப உபாலி என்றழைக்கப்படும் நாடகந்தகே உபாலி
39 வயது
முகவரி – புவக்வத்த, தென்கந்தலிய.
அவர் 2008 ஒக்டோபர் 1ஆம் திகதியன்று, அக்குரஸ்ஸ பொலிஸ் பிரிவில் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்த வழக்கில் தேடப்படும் சந்தேகநபராவார். மேலும், மாத்தறை மேல் நீதிமன்றத்தால் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
16.04.2008 அன்று, மாவரல பொலிஸ் பிரிவில் நடந்த துப்பாக்கிச் சூடு மற்றும் கொலைச் சம்பவத்தில் சந்தேகநபராக உள்ளார். மேலும், மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.
ஊருபொக்க பொலிஸ் பிரிவில் சட்டப்பூர்வ காவலில் இருந்து 15 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மாத்தறை மேல் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.