நீர் கட்டணத்தை 10 முதல் 30 சதவீதம் வரை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய
நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
மின்சாரக் கட்டண குறைப்போடு ஒப்பிட்டு, நீர் கட்டணங்களையும் குறைப்பதில் கவனம் செலுத்தப்படுவதாக அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
நீர்கட்டணக் குறைப்பு குறித்து ஆராய குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாகக் தெரிவிக்கப்படுகிறது.
நீர் கட்டணங்களைக் குறைப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை அடுத்த சில நாட்களுக்குள் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தலைவரிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
பின்னர் தலைவர் அந்த அறிக்கையை விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரிடம் கையளிப்பார் என்றும், பின்னர் அது தொடர்பான முன்மொழிவுகள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
நிலுவையில் உள்ள நீர் கட்டணங்களைச் செலுத்தாததால், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் கடன் 16 பில்லியன் ரூபாயாக உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டுகளில், நாடு முழுவதும் நீர் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் பெறப்பட்ட கடன்களுக்கு இந்த சபை கணிசமான வட்டியைச் செலுத்த வேண்டியுள்ளதாக நீர் வழங்கல் சபையின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இந்தக் கடனை நிர்வகிக்க, தங்கள் கட்டணங்களைச் செலுத்தத் தவறும் நுகர்வோரின் நீர் வழங்கல் துண்டிக்கப்பட்டுள்ளது.