யாழ்ப்பாணம் - கீரிமலை பகுதியில் உள்ள ஜனாதிபதி மாளிகையை பொது பயன்பாட்டுக்கு

கையளிக்க ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இணக்கம் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கீரிமலை ஜனாதிபதி மாளிகை தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்ட போதே அவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி மாளிகை அப்பகுதியில் உள்ள தனியார் காணிகளையும் கையகப்படுத்திய நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அந்த காணிகளின் உரிமையாளர்களுக்கு நஷ்ட ஈடுகளை, அல்லது காணிக்கான பெறுமதியை வழங்க முடியும்.

தொடர்ந்து சட்ட ஏற்பாடுகளுக்கு அமைவாக, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கோ, சுற்றுலாத்துறைக்கோ ஜனாதிபதி மாளிகையை கையளிக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

தையிட்டி விகாரை

யாழ். மாவட்ட மற்றும் தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களின் தீர்மானங்களை புறம் தள்ளி தையிட்டியில் நிர்மாணிக்கப்பட்ட விகாரை அகற்றப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

அதன் போது, தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதியில் உள்ள தனியாருக்கு, அருகில் உள்ள விகாரை காணிகளை வழங்குவதற்கு அல்லது அவர்களுக்கு நஷ்டஈடு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க முடியும் என வடமாகாண ஆளுநர் தெரிவித்தார்.

ஜனாதிபதியும் அதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கூறினார். அதனை பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனும் ஏற்றுக்கொண்டார்.

இருந்த போதிலும், பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சட்டவிரோதமான முறையில் மதில் காட்டினாலே அகற்ற சட்டம் இருக்கையில், சட்டவிரோதமான முறையில், ஒருங்கிணைப்பு குழு தீர்மானங்களையும் மீறி அடாத்தாக கட்டப்பட்ட விகாரை அகற்றப்பட வேண்டும். அது எந்த விதத்திலும் இன நல்லிணக்கத்திற்கோ, மாற்றத்திற்கோ ஏற்றதல்ல என தெரிவித்தார்.

யாழில் 33 பாதுகாப்பற்ற புகையிரத கடவைகள்

யாழ்ப்பாணத்தில் 33 பாதுகாப்பற்ற புகையிரத கடவைகள் காணப்படுகின்றன பிரதேச செயலக பிரிவுவாரியாக சாவகச்சேரியில் 14, நல்லூரில் 07, தெல்லிப்பழையில் 06, யாழ்ப்பாணத்தில் 03, உடுவிலில் 03 என 33 பாதுகாப்பற்ற புகையிரத கடவைகள் காணப்படுகின்றன. எனவே இந்த புகையிரத கடவைகளை பாதுகாப்பானதாக அமைக்க வேண்டும்.

அதேவேளை, யாழில் நேர அட்டவணைக்கு ஏற்ப 38 புதிய பேருந்துகள் தேவையாக உள்ளன. அந்தவகையில் யாழ்ப்பாணம் சாலைக்கு 23 பேருந்துகளும், பருத்தித்துறை சாலைக்கு 10 பேருந்துகளும், காரைநகர் சாலைக்கு 05 பேருந்துகளும் தேவையாக உள்ளன.

யாழ்ப்பாணத்தில் தற்போது வீதி விபத்துகள் அதிகரித்து காணப்படுகின்றன. யாழில் 06 வீதி சமிக்ஞை விளக்குகளே காணப்படுகின்றன.

எனவே வீதி விபத்துக்களை குறைக்க வீதி சமிக்ஞைகளை அமைக்க வேண்டும் என மாவட்ட செயலர் ம. பிரதீபன் ஜனாதிபதியிடம் கோரிக்கை வைத்தார்.

மாவட்ட செயலரினால் பேருந்து தொடர்பில் கூறப்பட்டதற்கு,  மார்ச் மாதமளவில் 10 புதிய பேருந்துகள் வழங்கவும் மேலும் 10 திருத்தி அமைக்கப்பட்ட பேருந்துகளை வழங்க நடவடிக்கை எடுக்கபட்டுள்ளதாக தெரிவிக்கபட்டது.

30 ஆயிரம் வேலைவாய்ப்புக்கள்

அரச வேலைக்கு 30 ஆயிரம் வெற்றிடங்கள் உள்ளன. குறிப்பாக பொலிஸ் திணைக்களத்தில் அதிகளவான வேலை வாய்ப்புகள் உள்ளன. தமிழ் மொழி மூல பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுகின்றன. அதனால் பொலிஸ் வேலைக்கு இளையோர் இணைய முன் வர வேண்டும். தமிழ் இளைஞர் யுவதிகள் பொலிஸ் சேவையில் இணைய வந்தால் 9 ஆயிரம் பேர் வரை ஆட்சேர்ப்பு செய்ய நடவக்கை எடுக்க முடியும்.

அதற்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இளையோரை பொலிஸ் வேலையில் இணைய ஊக்கப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

அச்சுவேலி - தொண்டமானாறு வீதி புனரமைப்பு

அச்சுவேலி தொண்டமனாறு வீதியின் 7 கிலோமீற்றர் வரையான தூரத்தை புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அபிவிருத்திக்காக ஒதுக்கப்படும் நிதியை சரியாக முழுமையாக செய்யாது திருப்பி அனுப்பப்படுவது வடக்கு மாகாணத்தில் அதிகமாக இருக்கின்றது. அதிகாரிகள் அரசியல் வாதிகளை கைகாட்டி நிதியை திருப்பியனுப்பும் நிலை கடந்த காலத்தில் இருந்தது. ஆனால் இனி அவ்வாறு இருக்க முடியாது.

எனவே யாழ். மாவட்டத்தில் உள்ள குறுக்கு வீதிகள் , புனரமைக்கப்படாமல் குறையில் காணப்படும் வீதிகள் என அனைத்து வீதிகளையும் புனரமைக்க உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதி அறிவுறுத்தினார். அத்துடன் மீன்பிடி இறங்கு துறைகளையும் புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இராணுவத்தின் வீதி தடைகள்

வடமராட்சி மற்றும் தென்மராட்சி பகுதிகளில் இடம்பெறும் சட்டவிரோத மண் அகழ்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதன் போது, பொலிஸார் அதனை கட்டுப்படுத்துவதற்கு தமக்கு வாகன வசதி இல்லை என குறிப்பிட்டனர்.

அதனை அடுத்து இராணுவத்தினரது பங்களிப்புடன் வீதித் தடை, காவலரண்கள் அமைத்து தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி