ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்றைய தினம் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ளார்.
அங்கு அவரது தலைமையில் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நடைபெற்றபோது, வைத்தியசாலைப் பிரச்சினைகள் தொடர்பில், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா முன்வைத்தார்.
யாழ்ப்பாணம் போதனா கிட்டத்தட்ட 170 பணியாளர்கள் 3 வருடங்களாக சம்பளமின்றி பணியாற்றியுள்ளதாக ஜனாதிபதியிடம் தெரிவித்த அவர், குறித்த பணியாளர்களை சம்பளம் இல்லாமல் அரச நிறுவனம் ஒன்றில் எந்த அடிப்படையில் சம்பந்தப்பட்ட வைத்திய அதிகாரி பணிக்கமர்த்தியுள்ளார் எனவும் கேள்வி எழுப்பினார்.
அத்துடன் “தொடர்ந்தும் இலவசமாக வேலை செய்வோம்” என குறிப்பிட்டு, 170 பணியாளர்களிடம் குறித்த வைத்திய அதிகாரி வற்புறுத்தி கடிதம் வாங்கியுள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் குறித்து கதைப்பதற்கு சென்ற பல பணியாளர்களை வைத்தியசாலையை விட்டு வெளியேற்றியதுடன் ஒரு பாராளுமன்ற உறுப்பினராகத் தான் கதைப்பதற்கு சென்ற போது, தனக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளனர் என்றார்.
இதேவேளை, யாழ். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் உள்ள அவசர சிகிச்சைப் பிரிவு கட்டிடம் அமைக்கப்பட்டு, பாவனைக்கு விடாது வெறுமனே காணப்படுவதாகவும் அர்ச்சுனா எம்.பி முறையிட்டார்.
2014ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட குறித்த கட்டடமானது, இன்னும் இயங்காத நிலையில் காணப்படுகின்ற போது புதிய கட்டடங்களை அமைப்பது ஏன் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
“ஒரு வைத்தியசாலைக்கு பணிப்பாளர் ஒருவரை தெரிவு செய்யும் போது வாரிய சான்றிதழ் (Board Certificate) அடிப்படையில் தான் தெரிவு செய்யப்பட வேண்டும். ஆனால், வடக்கு மாகாணத்தை பொருத்தமட்டில் கடந்த அரசாங்கத்தினால் வாரிய சான்றிதழ் இல்லாமல் அமைச்சரவை அனுமதி ஒன்றை பெற்றுக்கொண்டு, யாழ். போதனா வைத்தியசாலையில் வைத்தியர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்” என்றும், இராமநாதன் அர்ச்சுனா குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இது தொடர்பில் சுகாதார அமைச்சிடம் தான் எழுத்து மூல கடிதம் ஒன்றை வாழங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் போது நடந்த விடயங்கள் பின்வருமாறு,
நாட்டில் அரசியல் மாற்றம் ஏற்படுவதால் பொருளாதாரம் மாற்றம் பெறாது. அவ்வாறு நினைக்கவும் முடியாது. பொருளாதாரத்தை கட்டமைக்க அனைத்து துறைகளும் மீள் எழுச்சி செய்யப்படுவது அவசியம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
மக்களுடைய காணி நிலங்கள் மக்களுக்குரியது. அதே நேரம் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி தொடர்பில் பிரச்சினை அல்லது தேவைப்பாடுகள் வந்தால் அவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து நிலங்களை சுவீகரிப்பதும் அரசுக்கு அவசியமானது. மேலும், இராணுவத்தினர் தமது தேவைக்காக வைத்துக்கொண்டுள்ள காணி நிலங்களை விடவேண்டும் என கோரப்படுகின்றது.
“அவசிய தேவைகள் குறிப்பாக அந்தக் காணிகளில் முன்னெடுக்கப்படும் செயற்றிட்ட திட்ட வரைபை முன்வைத்தால் அவை தொடர்பில் கருத்தில்கொள்ள முடியும்.
இதேநேரம் போக்குவரத்து சேவையை சீராக்க, இணைந்த சேவையை நடத்துவது அவசியம்” என்றும் வலியுறுத்திய ஜனாதிபதி அதை முன்னெடுப்பதன் நோக்கம் குறித்தும் கூறியுள்ளார்.
“மக்களின் காணிகள் மக்களுக்கே உரித்தாக வேண்டும் எனவும், வடக்கின் காணிப் பிரச்சினை தொடர்பில் மீளாய்வு நடத்தப்பட்டு, விரைவில் அந்த காணிகளை மக்களிடம் மீள வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
“அதேவேளை, நாட்டின் அபிவிருத்திக்காகவோ அல்லது பாதுகாப்பு காரணங்களுக்காகவோ நாட்டில் எங்கிருந்தும் காணிகளை அரசாங்கம் சுவீகரிக்க முடியும். அந்த காணிகளுக்கு பதிலாக வேறு காணிகள் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும்” என்றும் ஜனாதிபதி கூறினார்.
இக்கலந்துரையாடலில், யாழ். மக்களுக்கான மிக முக்கியமான திட்டத்திற்காக யாழ். ஜனாதிபதி மாளிகை முற்றாக விடுவிக்கப்படத் தயாராக இருப்பதாகவும் அதற்கான உரிய முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
அதேவேளை, யுத்தத்தினால் இடம்பெயர்ந்த குடும்பங்கள் இன்னும் வடமாகாணத்தில் இருப்பதாகத் தங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளதால், இது குறித்து ஆராய்ந்து விரைவான முடிவுகளை எடுக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.
பொலிஸ் திணைக்களத்தில் உள்ள வெற்றிடங்களுக்கு தமிழ் பேசும் இளைஞர் யுவதிகளுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
பிரதமரின் செயலாளர் தலைமையில் நியமிக்கப்பட்ட குழு அரச நிறுவனங்களை நடத்திச் செல்வத்தில் 30,000 வெற்றிடங்கள் காணப்படுவதாக அடையாளம் கண்டுள்ளதென தெரிவித்த ஜனாதிபதி, ஆட்சேர்ப்பு நடைமுறைக்கு அமைய அந்த வெற்றிடங்கள் நிரப்பப்படும் என்பதோடு, பட்டதாரிகளுக்கும் இதன்போது வாய்ப்பு கிட்டும் என்றும் தெரிவித்தார்.
இதில், பொலிஸ் திணைக்களத்தில் உள்ள வெற்றிடங்களுக்கு தமிழ் பேசும் இளைஞர் யுவதிகளுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்படும் எனவும், விண்ணப்பிப்பதற்கு அவர்களை ஊக்குவிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
வட மாகாணத்தில் புதிய 03 கைத்தொழில் மையங்களை அமைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மேலும், குறித்த கைத்தொழில் மையங்களை காங்கேசன்துறை, பரந்தன் மற்றும் மாங்குளம் ஆகிய பகுதிகளில் நிறுவுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை புலம்பெயர் நாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு இந்த திட்டங்களில் முதலீடு செய்யுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் இந்த கைத்தொழில் மையங்களை அமைப்பதன் மூலம் வடமாகணத்தில் உள்ள இளைஞர், யுவதிகளுக்கான வேளைவாய்ப்பையும் பெற்றுக்க முடியும் எனவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.