யாழ்ப்பாணம் வருகை தந்துள்ள ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்கும் முகமாக வடமாகாண
வேலையற்ற பட்டதாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் உள்ளிட்ட நிகழ்வில் கலந்துகொள்ள ஜனாதிபதி இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்
இதன்போது மாவட்ட செயலகத்தில் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஜனாதிபதி கலந்து கொண்டிருந்த வேளை, வேலையற்ற பட்டதாரிகள் மாவட்ட செயலகத்திற்கு அருகில் தமக்கு வேலைவாய்ப்பு கோரி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறித்த போராட்டத்திற்கு தடைவிதிக்க கோரி யாழ். நீதவான் நீதிமன்றில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், அமைதியாக போராட முடியும் என கூறி, போராட்டத்திற்கு தடை விதிக்க முடியாது என கூறிய மன்று தடைகோரிய மனுவை நிராகரித்திருந்தது.
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் அதன் தலைவரும் அமைச்சருமான சந்திரசேகரன் தலைலையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பங்குபற்றலுடன் இன்று நடைபெற்று வருகிறது.
அமைச்சர் பிமல் ரத்நாயக்க உள்ளிட்ட ஆளும் தரப்பு பிரதிநிதிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், வட மாகாண ஆளுநர், துணைக்கள தலைவர்கள் என பலரும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த கூட்டத்தில் வழமைக்கு மாறான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் சோதனை நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றன.
இதேவேளை, மேலும் பல பொதுக் கூட்டங்களில் ஜனாதிபதி கலந்து கொள்வார் என்று ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.