வடக்கு கிழக்கு வேலையற்ற பட்டதாரிகளின் சார்பில் தொடர் உண்ணாவிரத கவனயீர்ப்பு
போராட்டம் இன்று (29) கிழக்கு ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் ஆரம்பமானது.
இப் போராட்டம் வடக்கு கிழக்கு வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
"அரசாங்கம் இனியும் காலதாமதப்படுத்தாமல் உடனடியாக எங்களுக்கான அரச வேலைவாய்ப்பை பரீட்சை இன்றி உறுதிப்படுத்து" என்ற கோரிக்கைக்கு அமைவாக இக்கவனயீர்ப்பு போராட்டம் இடம் பெற்று வருகின்றது.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வேலையற்ற பட்டதாரிகள் கருத்து தெரிவிக்கையில், தேர்தல் காலங்களில் பல்வேறுபட்ட வாக்குறுதிகளை வழங்கி இருந்தபோதும் வேலை இல்லாமல் இருக்கும் பட்டதாரிகள் தொடர்பில் அரசாங்கம் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் சிறந்த தீர்வினை பெற்று தருமாறு கோரியும் இந்த உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்தனர்.
பொலிஸார் மனுத்தாக்கல்
ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் யாழ்ப்பாண வருகையின் போது போராட்டம் நடத்துவதற்கு தடை விதிக்க கோரி யாழ்ப்பாணம் பொலிஸார் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம், பொதுமக்கள் சந்திப்பு என சில நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக எதிர்வரும் 31ஆம் திகதி யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார்.
ஜனாதிபதியின் வருகையின் போது போராட்டம் நடத்துவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், வடக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் உள்ளிட்டவை அழைப்பு விடுத்திருந்தன.
இந்நிலையில் போராட்டம் நடத்துவதை தடை செய்யக்கோரி யாழ்ப்பாணம் பொலிஸார், யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் இன்றைய தினம் மனுத்தாக்கல் செய்தனர்.
இதனையடுத்து பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், வடக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் சங்கத் தலைவர் உள்ளிட்ட ஐவரை நாளைய தினம் வியாழக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்புக் கட்டளை அனுப்ப யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தடை உத்தரவு தொடர்பான மனு மீதான விசாரணை நாளைய தினம் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் இடம்பெற உள்ளது.