ரமழான் நோன்பு காலத்திற்காக சவுதி அரேபியாவிலிருந்து நன்கொடையாக வழங்கப்பட்ட
பேரீச்சம்பழங்களுக்கும் இலங்கை சுங்கம் வரி விதித்துள்ளதாக இன்று (28) தெரியவந்துள்ளது.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பின் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வியின் போது இந்த விடயம் தெரியவந்துள்ளது.
ரமழான் நோன்பு காலத்தில் பேரீச்சம்பழங்களுக்கான வரியை அரசாங்கம் தளர்த்தும் என்று அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இதன்போது தெரிவித்தார்.
அதன்படி, இது தொடர்பில் அமைச்சரவை தீர்மானமும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
இருப்பினும், குறித்த தீர்மானங்கள் அறிவிக்கப்படுவதற்கு முன்பே இந்த பேரீச்சம்பழ கையிருப்பு கிடைக்கப்பெற்றுள்ளதால் அதற்கு வரி விதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு தேவையான நிவாரணங்களை வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
சவூதி அரேபியா நன்கொடையாக வழங்கிய 50 மெட்ரிக் தொன் பேரீச்சம்பழங்களுக்கு இலங்கை சுங்கம் 33 மில்லியன் ரூபாவை வரியாக விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.