உள்ளூராட்சிமன்றத் தேர்தலின் விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தின் சில சரத்துக்கள்
அரசியலமைப்புக்கு முரணானவை என்று தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை நிறைவுறுத்தியுள்ள உயர் நீதிமன்றம், தனது ரகசிய தீர்ப்பை ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற சபாநாயகருக்கும் அனுப்புவதாக இன்று (27) அறிவித்துள்ளது.
இரண்டு நாட்கள் நீடித்த வழக்கு விசாரணையை நிறைவுறுத்தி உயர் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
இந்த மனுக்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் உள்ளிட்ட நான்கு தரப்பினர் தாக்கல் செய்திருந்தனர்.
இதேவேளை, ஏப்ரல் மாதம் இரண்டாவது அல்லது நான்காவது வாரத்தில், உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்கும் என்று தான் நம்புவதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறுகிறார்.
யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்துவதற்கான சட்டமூலத்தை, அனைத்துக் கட்சிகளும் கூட்டாக பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
"அனைத்து கட்சிகளின் தலைவர்களது ஒப்புதலுடன், உள்ளூராட்சிமன்றத் தேர்தலை மீண்டும் நடத்துவதற்கான சட்டமூலத்தை, அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. பல தரப்பினர் தற்போது நீதிமன்றத்தில் ஏராளமான மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். ஆனால், இது தேர்தல்களை நடத்துவதற்கு எந்தவொரு குறிப்பிட்ட தடையையும் ஏற்படுத்தாது என்று நாங்கள் நம்புகிறோம். வழக்கு முடிவு செய்யப்படும் நேரத்தில், நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வெளியிடும். ஆனால், நீதிமன்றத்திற்கு அதற்குக் குறைந்த நாட்களே உள்ளன. எனவே, ஏப்ரல் இரண்டாவது வாரம் அல்லது நான்காவது வாரத்தில் தேர்தல் நடத்தப்படும் என்று நம்புகிறோம். ஏனென்றால், இந்தப் பிரதேச சபைத் தேர்தல்களை, வடக்கு மாகாணத்திலும் நாடு முழுவதும் விரைவில் நடத்தவே நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்றார்.
வேட்புமனுக்கள் கோரப்பட்ட பின்னர், தமிழ் – சிங்கள சித்திரைப் புத்தாண்டுக்கு முன்னர் உள்ளூராட்சிமன்றத் தேர்தல்கள் நடத்தப்படும் என்று, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, டிசம்பர் 20 அன்று, மல்வத்து பீடத்தின் மஹாநாயக்க தேரரிடம் கூறியிருந்தார்.
இதன்படி, உள்ளூராட்சிமன்றத் தேர்தலை விரைவாக நடத்த, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு நீதிமன்றம் உத்தரவும் பிறப்பித்துள்ளது. அதன்படி, உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்துவதற்கான திட்டங்கள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுவிட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் 325 உள்ளூராட்சிமன்ற நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் 271 பிரதேச சபைகள், 41 நகர சபைகள் மற்றும் 23 நகராட்சி மன்றங்கள் அடங்குகின்றன.