கொழும்பில் இந்தியத் தூதரகம் ஏற்பாடு செய்திருந்த குடியரசுத் தினத்தை ஒட்டிய நேற்றைய
இரவு விருந்தின் போது, சிறுபான்மையின எம்.பிக்கள், பிரமுகர்கள் ஆகியோர், ஒரு வட்டமேசையில் அமர்ந்திருந்து உணவருந்திக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்களின் பேச்சு, ஒரு குறிப்பிட்ட எம்.பி பற்றி திரும்பியது.
நாடாளுமன்றத்தில் கால் நூற்றாண்டுக்கு மேல் சிறுபான்மை மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி வரும் ஓர் எம்.பி, ஆச்சரியத்தோடு ஒரு விடயத்தை குறிப்பிட்டார்.
“சில தினங்களுக்கு முன் நாடாளுமன்றத்தின் மலசலகூடம் இருந்த பகுதிக்குச் சென்றேன். அங்கு அந்த எம்.பி, கண்ணாடிக்கு முன் நின்று அலைபேசியில் 'டிக் டாக்' பேசிக் கொண்டிருந்தார். மலசல கூடத்திலும் இந்த மனுஷன் அதை விடுவதாக இல்லை..!” என்றார் அந்த நீண்ட கால எம்.பி.
இதைக் கேட்டதும், அங்கிருந்தவர்கள் எல்லோரும் கேலிக் கிண்டல் சிரிப்பில் ஆழ்ந்து போனார்கள். தமிழர் பெருமை உலகம் போற்றும் அளவுக்கு உயர்ந்து விட்டது..! வாழ்க நமது அந்தத் தமிழ் எம்.பி...!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
புதிய அரசமைப்பை உருவாக்கும் விடயம் தொடர்பான விவகாரத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகளை ஒரு நிலைப்பாட்டில் கொண்டுவரும் முயற்சியாக, அந்தக் கட்சிகளிடையே இன்று ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, இன்றைய சந்திப்பையும் திகதி வரையறை குறிப்பிடாது தள்ளிப் போட்டிருப்பதாக அறிய வருகிறது.
இந்தச் சந்திப்பு, முதலில் நேற்று முன்தினம் நடைபெறுவதாக இருந்து, பின்னர் இன்றைய தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. ஆயினும், இந்தக் கூட்டம் தொடர்பில் ஒரு தீர்மானத்தைத் தமிழரசுக் கட்சி எடுப்பதற்கு வசதியாக, அதுவரையில் இக்கூட்டத்தை தள்ளிப் போட தமிழ் தேசிய மக்கள் முன்னணி தீர்மானித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானத்தை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி, தமது தரப்பு ஆரம்பித்துள்ள இந்த முன்முயற்சியில் பங்குபற்றுமாறு தமிழரசுக் கட்சிக்கு நேரடியாகக் கோரிக்கை விடுத்து அழைப்பு வழங்கி இருந்தார்.
எனினும், இத்தகைய விடயங்கள் தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்கு தமது கட்சி ஏழு உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழுவை அமைத்திருப்பதாக கூறிய சிவஞானம், அந்தக் குழுவோடு கலந்துரையாடிய பின்னர் தாம் பதிலளிப்பதாகத் தெரிவித்திருந்தார்.
அத்தகைய முடிவை தமிழரசுக் கட்சி எடுக்கும் வரை, அது தொடர்பான கட்சிகளின் சந்திப்பை தள்ளிப் போடுவதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி தீர்மானித்திருப்பதாக இப்போது தெரிகிறது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு, எதிர்வரும் எட்டாம் திகதி மட்டக்களப்பில் கூடுகின்றது. அதற்கு முன்னர் மேற்படி ஏழு உறுப்பினர்கள் கொண்ட குழுவின் கூட்டத்தைக் கூட்டுவதற்கு பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் முடிவு செய்து இருக்கிறார் என அறிய வந்தது.
அந்தக் கூட்டம் எங்கு நடைபெறும், எப்போது நடைபெறும் என்பது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. குறைந்த பட்சம் வரும் 8ஆம் திகதிக்குள் அந்தக் கூட்டம் நடைபெறாவிட்டால், மட்டக்களப்பில் நடைபெறும் மத்திய குழுக் கூட்டத்துக்கு முன்னர் - பெரும்பாலும் முதல் நாள் - மட்டக்களப்பிலாவது அந்தக் கூட்டத்தை நடத்தலாம் என்ற யோசனை தமிழரசுக் கட்சி வட்டாரத்தில் இருப்பதாகத் தெரிகின்றது.
ஆக, அந்தக் கூட்டத்தின் பின்னர் தான் ஒன்றபட்டு செயற்படுவதற்கு முன்னேற்பாடாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அழைத்துள்ள கூட்டம் நடைபெறும் என இப்போது தெரிகிறது.
-முரசு